முகப்பு /செய்தி /இந்தியா / ‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு

‘துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’- டெல்லி மருத்துவரின் வேதனை பதிவு

டெல்லியை சேர்ந்த இளம்பெண்

டெல்லியை சேர்ந்த இளம்பெண்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து செல்போனில் பாடல்களை கேட்டபடி கொரோனாவில் இருந்து மீண்டுவிடுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

‘நான் மிகவும் வருந்துகிறேன். துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிட்டோம்’ டெல்லியைச் சேர்ந்த மோனிகா என்ற மருத்துவரின் ட்விட்டர் பதிவு இது. டெல்லியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டும் விடுவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்தார்.

மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்ட நிலையிலும் அவருக்கு ஐசியூ வார்டில் இடம் கிடைக்கவில்லை. கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 10 நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். ரெம்டெசிவீர் மற்றும் பிளாஸ்மாதெரபி போன்றவை அவருக்கு கிடைத்துள்ளது.

Also Read: 'துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுவது கடமை' - தகன மேடையில் உதவி செய்யும் டெல்லி காவலர்

இந்த இளம்பெண்ணின் தன்னம்பிக்கை குறித்து கடந்த சில தினங்களுக்கு இதே மருத்துவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவள் மிகவும் வலிமையான பெண் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். மருத்துவரிடம் அந்தப்பெண் பாடல் இசைக்கும் படி கேட்டுள்ளார். அவரும் பாடலை போனில் இசைக்க செயற்கை சுவாசம் பெற்று வந்த நிலையில் கைகள் மட்டும் கால்களை உற்சாகமாக அசைத்து படுக்கையிலே நடனமாடினார். ‘ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள்’என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவர் மோனிகா பதிவிட்டிருந்தார்.

மே 8-ம் தேதி மருத்துவர் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து செல்போனில் பாடல்களை கேட்டபடி கொரோனாவில் இருந்து மீண்டுவிடுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் மே 10-ம் தேதி அவருக்கு ஐசியூவில் இடம் கிடைத்ததை அந்த மருத்துவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என அந்தப் பதிவில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்தப்பதிவில், “அவளுக்கு ஐசியூ படுக்கை கிடைத்துவிட்டது. ஆனால் அவளது உடல்நிலை சீராக இல்லை. அந்த தைரியமான பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். சில நேரங்களில் நான் உதவியற்றவளாக உணர்கிறேன். நாம் நினைப்பது நம் கையில் இல்லை. இறைவனின் கையில்தான் இருக்கிறது. ஒரு சிறு குழந்தை அவளுக்காக வீட்டில் காத்திருக்கிறது. தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அந்தப்பெண் நேற்று இரவு இறந்து விட்டதாக மருத்துவர் மோனிகா வருத்தத்துடன் கூறியுள்ளார். நான் மிகவும் வருந்துகிறேன்..துணிச்சலான ஒரு ஆத்மாவை நாம் இழந்துவிடோம். அந்த குடும்பத்துக்கும் அவளது குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona, Corona death, Covid-19, Delhi, Viral Video