Home /News /national /

டெல்லியில் தீவிரமடையும் கொரோனா... பரிசோதிக்கப்படும் 3-ல் ஒருவருக்கு தொற்று உறுதி

டெல்லியில் தீவிரமடையும் கொரோனா... பரிசோதிக்கப்படும் 3-ல் ஒருவருக்கு தொற்று உறுதி

மாதிரி படம்  (AP)

மாதிரி படம் (AP)

டெல்லியில் காட்டுத் தீ போல கொரோனா பரவி வரும் நிலையில், பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் மூவரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நாட்டின் தலைநகரான டெல்லி தற்போது கொரோனா வளைத்தில் சிக்கி தவிக்கிறது. டெல்லியில் இதுவரை 41,182 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,327 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 7,353 பேரில், 2,224 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 3 பேரில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது  ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டுமல்ல, கடந்த 7 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மூன்றில் ஒரு பகுதியினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 34,977 பேரில், 11, 239 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதன்மூலம் ஜூன் 8 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை பாதிப்பு எண்ணிக்கை 32 .13 விழுக்காடு அளவு அதிகரித்துள்ளது.

    டெல்லியில் தற்போது 5,137 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 695 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 182 பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    20,793 கொரோனா நோயாளிகள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் இதுவரை 222 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லி மாநில அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது பரிசோதனைகளை தீவிரப்படுத்துவது என்றும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடு வீடாக பரிசோதனைகளை மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 20 ஆம் தேதி முதல் நாள்தோறும் 18,000 பரிசோதனைகளை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக டெல்லி மாநில தலைவர் அதேஷ் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    Also read... இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி