• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”அவர்களை இதற்கு முன் இங்கே பார்த்ததே இல்லை” வன்முறையாளர்கள் குறித்து உள்ளூர்வாசிகள் கருத்து

”அவர்களை இதற்கு முன் இங்கே பார்த்ததே இல்லை” வன்முறையாளர்கள் குறித்து உள்ளூர்வாசிகள் கருத்து

டெல்லி வன்முறை

டெல்லி வன்முறை

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லியில் வன்முறை ஓய்ந்து இயல்பு நிலை திரும்புவதை அடுத்து, பொதுமக்கள் வீதிகளில் நடமாடத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டதாக பெரும்பாலும் இஸ்லாமியர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    டெல்லி வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோருக்கு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் 144 தடை உத்தரவு தளர்த்தப்படுவதால், பொதுமக்கள் வீதிகளில் நடமாடத் தொடங்கியுள்ளனர். ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதோடு, வாகனப் போக்குவரத்தும் ஓரளவு சீரடைந்துள்ளது.

     

    மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வஜ்ரா வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, வடகிழக்கு பகுதிக்கான சிறப்பு காவல் ஆணையர் ஓ.பி.மிஸ்ரா, பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் நமது செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், மெல்ல இயல்பு நிலை திரும்புவதாகக் கூறினார்.

    இதனிடையே, கலவரம் பாதித்த பகுதிகளில் சிதறிக்கிடந்த கற்கள், வன்முறையாளர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் காவல்துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    கலவரம் தொடர்பாக இதுவரை 108 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில், கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் உள்பட பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என கூறப்படுகிறது. தாஹிர் உசைன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு சொந்தமான இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

     

    இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா, டெல்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இயல்பு நிலையை மீட்கும் வகையில் ஆங்காங்கு அமைதி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. அதே சமயம் கலவரங்களில் 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

    டெல்லியில் பெண்கள், குழந்தைகள் என பாராமல் கண்மூடித்தனமாக தாக்கிய வன்முறையாளர்கள், அங்குள்ள பள்ளி மற்றும் மருத்துவமனைகளை சூறையாடியதுடன், தீவைத்தும் எரித்துள்ளனர்.

    வன்முறையில் ஈடுபட்டவர்களை இதுவரை இந்த பகுதியில் பார்த்ததே இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    "பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் படிக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தியது ஏன்? பள்ளிக்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இவ்வளவு வெறுப்பு ஏன் வந்தது?

    எதிர்பாராதவிதமாக ஏதோதோ நடந்து முடிந்துவிட்டது. இப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை. அவர்கள் இந்த பகுதியைச் சேர்ந்தவர்களே இல்லை." என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

    வன்முறையாளர்கள் பல இடங்களில் சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளதால், குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருப்பதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: