டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாகத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஹவாலா பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற ரெய்டில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில், இவரின் வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவரிடம் நடைபெறும் விசாரணை குறித்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறது. அதில், 'அமைச்சர் தனது வாக்குமூலத்தை எழுதித் தர விசாரணை அமைப்பு கூறிய நிலையில், இவர் தனது வாக்குமூலத்தை எழுத நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார். இவர் மிக மெதுவாகவே எழுதுகிறார். சொல்லப்போனால் ஒரு பக்க வாக்கு மூலத்தை எழுத இரண்டு மணி நேரத்திற்கு மேல் நேரம் எடுத்துக் கொள்கிறார். இவ்வாறு விசாரணையை தாமதப்படுத்துகிறார். எனவே, இவரது காவலில் வைத்து விசாரிக்க மீண்டும் ஐந்து நாள்கள் அவகாசம் வேண்டும்' என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது.
அதேவேளை, அமைச்சரின் தரப்பு கூறுகையில், 'எனக்கு எழுதத் தெரியும், மோசமான உடல் நிலையில் கூட நான் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். அமலாக்கத்துறையினர் தான் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறார்கள். இப்போது எனக்கு எழுதத் தெரியவில்லை எனக் கூறுகிறார்கள். நான் ஒரு அமைச்சர் எனக்கு நன்றாகவே எழுதத் தெரியும்' என விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், இவரை வரும் திங்கள் வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் சந்தயேந்திரா ஜெயின் 11 நாள்களாக சிறைச்சாலையில் உள்ள உணவை உண்பதில்லை எனவும் தினமும் கோயில் வழிபட்ட பின்னர்தான் உணவு உண்ணும் வழக்கம் கொண்டவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
ஆம்புலன்ஸ் கிடைக்காததால் அவலம்.. 4 வயது குழந்தை உடலை தோளில் சுமந்து நடந்த குடும்பத்தினர்
மேலும், இவர் தற்போது சிறையில் பழங்களை மட்டுமே உண்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்னர் சத்யேந்திரா ஜெயினுக்கு நலக்குறைவு ஏற்பட்டு ஒரு நாள் முழுதும் மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உடல் நலம் தேறிய நிலையில், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.