முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் நேற்று டெல்லியின் மதுபானக்கடைகளில் அலைமோதிய கூட்டம்!

டெல்லி மதுபானக்கடை

டெல்லியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் வருகிற 26ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் டெல்லியில் நேற்று இரவு முதல் 6 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. இதனால், கொரோனா மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் வருகிற 26ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது. டெல்லியில் கொரோனா விகிதம் 29.74% வரை உயர்ந்துள்ளது. அதாவது நகரத்தில் சோதிக்கப்படும் ஒவ்வொரு மூன்றாவது மாதிரியும் கொரோனா பாடிசிட்டிவாக இருக்கிறது. இந்த மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல்லி அரசு ஏற்கனவே அறிவித்திருந்த வார இறுதி நாட்கள் ஊரடங்கை வாரம் முழுவதும் நீட்டிக்கும் முடிவை எடுத்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த நேரம் பயன்படுத்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இது குறித்து பேசிய முதல்வர் கெஜ்ரிவால், "டெல்லி அனைத்தும் ஒரு குடும்பம் போன்றது என்று நான் எப்போதும் கூறுவேன். இப்போது கூட நாம் இந்த பாதிப்பை ஒன்றாக எதிர்கொள்வோம். நாம் முதல் அலையின் போது வென்றோம், மீண்டும் வெல்வோம்" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் உண்மையில் ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகளின் பற்றாக்குறை இருப்பதாக கூறினார்.

டெல்லியின் சுகாதார அமைப்பு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் இது ஒரு சிறிய ஊரடங்கு தான், டெல்லியை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், முதல்வரின் ஒரு வார ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து, டெல்லியில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், டெல்லியின் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் நேற்று கடும் கூட்டம் நெரிசல் காணப்பட்டது. மேலும் பலர் தங்கள் மாநிலங்களுக்கு நடைப்பயணத்தை மேற்கொண்ட அவலநிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல, இந்த 6 நாட்கள் முழு ஊரடங்கு காலத்தில், மளிகை சாமான்கள், மருந்துகள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு மற்றும் செபி, பங்குகள் தொடர்பான அலுவலகங்களும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுபானக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுமா என்பதற்கு தெளிவான விளக்கங்களை மாநில அரசாங்கம் வழங்காததால், நேற்று அனைத்து மதுபான கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசை காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கினர்.

ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு எண்ணற்ற பாட்டில்களை வாங்கினர். 6 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்தாலும், அது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது நல்லது என்று மதுப்பிரியர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, கள்ளச்சந்தையில் இருமடங்கு விலை கொடுத்து மது வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். சில இடங்களில் சமூக விலகல் போன்ற எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடைபிடிக்காததால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: