டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: விவசாய சட்டங்களில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி

விவசாயிகள் போராட்டம்

விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப், ஹரியானா விவசாயிகளின் போராட்டங்கள் 5-வது நாளாக தொடர்ந்துவருகிறது.

 • Share this:
  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி - ஹரியானா மாநில எல்லைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான டிராக்டர், லாரிகளில் பேரணியாக வந்து டெல்லி புராரியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் சனிக்கிழமை முதல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

  போராட்டத்தை கைவிட்டு டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட விவசாயிகள், எந்தவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

  புராரி மைதானம் மட்டுமின்றி திக்ரி, சிங்கு, காஜிபூர் உள்ளிட்ட மாநில எல்லைகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டெல்லி - ஹரியானா எல்லையில் உள்ள திக்ரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், குருநானக் ஜெயந்தியையொட்டி பிரார்த்தனை மேற்கொண்டனர், அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினர்.

  டெல்லியில் இருந்து ஹரியானா செல்லும் வழியில் உள்ள மற்றொரு எல்லையான சிங்கு பகுதியில் போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக சிங்கு, திக்ரி எல்லைப் பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குருகிராம், ஃபரிதாபாத் உள்ளிட்ட நகரங்களில் காய்கறிகள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி - குருகிராம் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  டெல்லி - உத்தரப்பிரதேசம் எல்லையில் உள்ள காஜிபூரில் இரவில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இசைக்கருவிகளை மீட்டி பாடல் பாடி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

  தலைநகர் டெல்லிக்குள் நுழையும் 5 எல்லைப்பகுதிகளை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் எச்சரித்திருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு பாஜக தலைவர் ஜே.பி நட்டா இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நரேந்திர சிங் தோமர் இன்று காலையில் மீண்டும் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.

  இதற்கிடையே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும் கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டியும், விளைபொருட்களை கையில் ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

  இதனிடையே, மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு புதிய உரிமைகளை அளிப்பதாக பிரதமர் பேசியிருப்பது விவசாயிகளை அவமதிப்பதாக உள்ளதாகவும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து தீர்வு காண பிரதமர் முன்வராதது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அவர்களை ஜந்தர் மந்தரில் போரட்டம் நடத்த பிரதமர் அனுமதித்து அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி எவ்வித நிபந்தனையும் இன்றி சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  இதற்கிடையில் இன்று உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘வேளாண் சட்டங்கள் வரலாற்று சீர்திருத்தங்கள் என்றும் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளது. எதிர்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகிறது’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: