டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ முன்பு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டார். இரவு முழுவதும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரிடம், இன்று காலை முதல் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு, டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மதுபான கொள்கை முறைகேடு திட்டமிட்டு, மிகவும் ரகசியமான முறையில் அரங்கேற்றப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. எனவே, மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதற்கு மறுப்பு தெரிவித்த மணீஷ் சிசோடியா தரப்பு வழக்கறிஞர், ஒருவர் பதில் கூறவில்லை என்றால், அவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்று வாதிட்டார்.
இருப்பினும், சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று, மணீஷ் சிசோடியாவை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கியது. துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்காக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். தொடர்ந்து, 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதை கண்டித்து டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சிபிஐ அலுவலகம் மற்றும் பாஜக அலுவலகம் முன்பும் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு எதிராக பாஜகவினரும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, CBI court, Delhi