திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய பர்ஹான் தசீர் காான் என்ற 35 வயது நபரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு டெல்லி டிசிபி பெனிதா மேரி கூறியதாவது, டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் சைபர் பிரிவு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். அதில், jeevansathi.com என்ற திருமண வரன் பார்க்கும் இணையதளத்தில் திருமணம் செய்து கொள்வதாக அறிமுகமான நபர் ஒருவர் தன்னிடம் அறிமுகம் ஆனார். அவர் தனது சொந்த பிஸ்னஸ் தேவைக்கு என தன்னிடம் பல முறை பணம் பெற்று ரூ.15 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளார் என மோசடி புகார் அளித்துள்ளார்.
இவர் புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் அந்த இணையதளத்தில் போலியான கணக்கை தொடங்கி நடத்தியுள்ளார். இதே மோசடியை இவர் பல பெண்களிடம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் திருமண இணையதளங்களில் தன்னை பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரி என பொய் கூறி வருடத்திற்கு ரூ.30-40 லட்சம் சம்பாதிப்பதாக ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா, கர்நாடகா என பல பகுதிகளைச் சேர்ந்த பெண்களிடம் இவர் மோசடி செய்துள்ளார். தனக்கு சொந்தம் என யாருமே இல்லை என அனைவரிடமும் ஒரே பொய்யை கூறியுள்ளார். ஆடம்பரக் கார்களில் சென்று பெண்களை பார்த்து, அவர்களை ஏமாற்றி தனது வலைக்குள் வீழ்த்தி அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.
இதையும் படிங்க:
ஒரு நாடு ஒரு மொழி கொள்கையை அமல்படுத்துங்கள் - அமித் ஷாவுக்கு சஞ்சய் ராவத் சவால்
இவரிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஒன்பது ஏடிஎம் கார்டுகள், நான்கு சிம் கார்டுகளை கொண்ட ஒரு செல்போன், ஒரு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.