மூன்றாவது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்...

மூன்றாவது நாளாக டெல்லிக்கு படையெடுக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ’டெல்லி சலோ’ பேரணி.. வீரியமடைந்த போராட்டம்..

விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் அமைதிப் போராட்டம் நடத்திக்கொள்ள டெல்லி போலீசார் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திக்ரி எல்லை வழியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்.

 • Share this:
  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் 2வது நாளாக டெல்லியை நோக்கி பேரணி சென்றபோது, போலீசாருடனான மோதலால் வழியெங்கிலும் பதற்றம் நீடித்தது. இதனைதொடர்ந்து டெல்லிக்குள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ’டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி 2வது நாளாக அனுமதியின்றி பேரணி சென்றனர். இதனால் டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள ஷிங்கு எல்லையில் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இதேபோல அம்பாலா அருகே ஷம்பு எல்லைப் பகுதியில் விவசாயிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் கலைக்க முயன்றனர்.  டெல்லி - பகதுர்கார் நெடுஞ்சாலை அருகேயுள்ள திக்ரி பகுதியில், பேரணியை தடுப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பெரிய சரக்கு வாகனத்தை, டிராக்டரைக் கொண்டு விவசாயிகள் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியிலும் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் மோதல் வெடித்தது. கைது செய்யப்படும் விவசாயிகளை அடைத்து வைக்க, டெல்லியில் உள்ள 9 விளையாட்டு மைதானங்களை தற்காலிக சிறைகளாக பயன்படுத்திக்கொள்ள டெல்லி அரசிடம், காவல் துறையினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை அம்மாநில அரசு நிராகரித்து விட்டது.

  6 மாதங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களுடன் பஞ்சாப்பில் இருந்து விவசாயிகள் டெல்லி கிளம்பியுள்ளதால், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குருகிராம்- டெல்லி எல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. உள்ளூர் கல்லூரிகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

  Also read: ’80% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை’.. வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி

  இந்நிலையில், விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் அமைதிப் போராட்டம் நடத்திக்கொள்ள டெல்லி போலீசார் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திக்ரி எல்லை வழியாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்.

  டெல்லி போராட்டத்துக்கு அனுமதி அளித்ததை வரவேற்றுள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, டிரக்டர் மீது சரக்கு வாகனத்தை மோதி, விவசாயி ஒருவரின் உயிரிழப்பு காரணமான டிரக் ஓட்டுநர் மீது ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் யமுனா விரைவுச் சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவியது. மீரட் நகரத்தில், விவசாயிகள் மறியல் போராட்டத்தால் தனது திருமணத்துக்கு மணமகன் ஒருவர் நடந்தே சென்றது பலரின் கவனத்தைப் பெற்றது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: