ஹோம் /நியூஸ் /இந்தியா /

அதிகரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள்.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய டெல்லி விமான நிலையம்!

அதிகரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள்.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய டெல்லி விமான நிலையம்!

முதல் முறையாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் டெல்லி

முதல் முறையாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் டெல்லி

டெல்லியில் விமான நிலையத்தை நிர்வகித்து வரும் டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் சார்பில் 57 எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் விமான நிலையத்தை நிர்வகித்து வரும் டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம் சார்பில் 57 எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் உலக சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டபோது, பசுமை போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

  விமான நிலையங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆண்டுதோறும் 1,000 டன் அளவுக்கு பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  டெல்லி விமான நிலையத்தில் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை படிப்படியாக விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக, விமான நிலைய உள்பயன்பாடு மற்றும் வெளிப்புற பான்பாடுகளுக்காக 64 எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 57 வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எஞ்சியுள்ள 7 வாகனங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

  Read More : ரூபாய் நோட்டில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்..பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

  விமான இயக்க ஒத்துழைப்பு, மீட்பு மற்றும் தீயணைப்பு போன்ற பயன்பாடுகளுக்காக 21 வாகனங்களும், தோட்டப்பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சரக்கு போக்குவரத்து போன்ற பயன்பாடுகளுக்காக 36 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

  சார்ஜிங் நிலையங்கள்

  விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்காக விமான நிலையத்திற்கு உள்ளேயே 12 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 22 சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளன.

  விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், பணியாளர்கள், வாடகை கார் சேவைதாரர்கள் போன்றோரும் இந்த சார்ஜிங் பாயிண்ட்களை பயன்படுத்தி அவர்களது வாகனங்களுக்கு சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

  எலெக்ட்ரிக் பேருந்துகள்

  டெல்லி விமான நிலையத்தின் முனையம் 3 மற்றும் பயணிகள் போக்குவரத்து மையத்திற்கு இடையே பயணிகளை ஏற்றிச் செல்ல எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் இந்த இரு இடங்களுக்கு இடையே 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் பயன்பாடு மூலமாக டெல்லி விமான நிலையத்தில் மாசுபாடு கட்டுக்குள் வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எதிர்காலத்தில் வளரும் தேவைகளை கருத்தில் கொண்டு, படிப்படியாக சார்ஜிங் நிலையங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர். குறிப்பாக, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மாசு வெளியேற்றத்தை முற்றிலுமாக தவிர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  நாட்டில் உள்ள மாநகரங்களில் டெல்லி தான் மிக அதிகப்படியான மாசுபாட்டை கொண்டுள்ளது. இதனால் அங்கு பொதுப் போக்குவரத்து பேருந்துகள் ஏற்கனவே எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது விமான நிலையத்திலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Delhi, Electric Buses, India