• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மூச்சுத் திணறும் டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

மூச்சுத் திணறும் டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

காற்று மாசு காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கொரோனா, டெங்கு அச்சுறுத்தி வரும் நிலையில், காற்று மாசும் குழந்தைகளை பலவீனம் அடைய செய்து வருகிறது.

  • Last Updated :
  • Share this:
    டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அரசு பார்க்கவில்லையா?' என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், வீட்டில் கூட தாங்கள் மாஸ்க் அணிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் எமர்ஜென்ஸி நடவடிக்கை மேற்கொண்டு லாக்டவுனை அறிவிக்கவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி நிற்கிறது. சென்னையில் தற்போது இந்த அளவு 100-க்கும் குறைவாக உள்ளது. இதனை வைத்து டெல்லியில் எந்த அளவுக்கு காற்று மாசுபட்டிருப்பதை நாம் உணரலாம்.

    இந்த பிரச்னை பல மாதங்களாக டெல்லியில் நீடித்து வருகிறது. இதற்கு அண்டை விவசாய மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளே காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியை சுற்றி நடைபெறும் கட்டிடப்பணிகளால் புகை பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

    இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது-

    டெல்லியில் இருப்பது என்பது ஒருவர் 20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதனை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் இதற்கு என்னதான் தீர்வு? எமர்ஜென்சி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 2 நாட்களுக்கு பொது முடக்கத்தை அறிவியுங்கள். என்று தெரிவித்தனர்.

    விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, 'கடந்த 6 நாட்களாக டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுக்கு பஞ்சாபில் கழிவுகள் எரிக்கப்படுவதே காரணம். இதனை அந்த மாநில அரசு தடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, 'நீங்கள் ஏன் விவசாயிகள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? காற்று மாசு ஏற்படுவதற்கு அவர்கள் குறிப்பிட்ட அளவு காரணமாக உள்ளனர். மற்ற காரணங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. டெல்லியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ன செய்கிறது?. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? 2-3 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ' என்றார்.

    காற்று மாசு காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கொரோனா, டெங்கு அச்சுறுத்தி வரும் நிலையில், காற்று மாசும் குழந்தைகளை பலவீனம் அடைய செய்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: