டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை தாண்டியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுமான பணிகளுக்கு தடை, போக்குவரத்து தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி நிற்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. விவசாயிகள் மீது மட்டும் பழி போடுவதை ஏற்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டெல்லியில் நவம்பர் 21ம் தேதி வரை கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் நவம்பர் 21 ஆம் தேதி வரை அரசுத் துறைகள் வீட்டிலிருந்து 100% இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதேபோல், பள்ளிகள்/கல்லூரிகள்/நிறுவனங்கள்/பயிற்சி மையங்கள்/நூலகங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாகவும் அறிவித்தார்.
மேலும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள் தவிர, டெல்லியில் அனைத்து வாகனங்களும் நுழைவதற்கு தடை விதித்தும் அறிவுறுத்தியுள்ளோம். காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து இதை உறுதி செய்யும் என்று கூறிய அவர்,டெல்லியில் பொது போக்குவரத்தை அதிகரிக்க 1000 தனியார் சிஎன்ஜி பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் பணி நாளை தொடங்குகிறது என கூறினார்.
இதையும் படிங்க: கிரிப்டோகரன்சி: தடையா... கடும் கட்டுப்பாடா... இந்தியா எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
மெட்ரோ ரயில்களில் தற்போது கொரோனா காரணமாக பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. எனவே, பயணிகள் உட்கார்ந்துகொண்டு பயணிக்க வேண்டும் என்ற முடிவை பரிசீலனை செய்யும்படி டிடிஎம்ஏவுக்கு மெட்ரோ-டிடிசி கடிதம் எழுதியுள்ளதாகவும் கோபால் ராய் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களின் பட்டியல் போக்குவரத்து துறையால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள், அத்தகைய வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்படும். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாசு சான்றிதழ் சரிபார்ப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் படிங்க: கேள்விக்கேட்ட முதலமைச்சருக்கு அதிர்ச்சி பதில் கொடுத்த ஆசிரியர்கள்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.