குன்னூரில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். அதில் விபத்து குறித்த முக்கியத் தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, “ஜெனரல் பிபின் ராவத் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைக் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ அதிகாரிகளுடன் உரையாட குன்னூருக்கு பயணமானார். இந்திய விமானப் படையின் எம்.ஐ. 17 வி5 ரக ஹெலிகாப்டர், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படைதளத்தில் இருந்து நேற்று (டிசம்பர் 8) முற்பகல் 11.48 மணிக்கு புறப்பட்டு சென்றது.
சூலூரில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துடன் ஹெலிகாப்டர், மதியம் சுமார் 12.08 மணியளவில் தொடர்பை இழந்தது. இதனையடுத்து குன்னூர் அருகே காட்டுப்பகுதியில் சிலர் தீப்பிடித்து எரிவதை பார்த்து அங்கு சென்றபோது அங்கு ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கி தீப்பிடித்து எரிவதை பார்த்தனர்.
மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு படையை விரைவாக அந்த இடத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்றது. மீட்கப்பட்டவர்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாக குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் உயிர் காக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also read: EXCLUSIVE VIDEO | ஹெலிகாப்டர் விபத்து... பரபரப்பான இறுதி நிமிடங்கள்...
இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், பிபின் ராவத்தின் ராணுவ ஆலோசகர் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர், கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பி.எஸ்.சவுகான், ஸ்குவாட்ரன் லீடர் குல்தீப் சிங், வாரண்ட் ஆஃபிசர் ரானா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் ஆஃபிசர் அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பல் ராய், நாயக் குருஸ்வாக் தேஜா, நாயக் ஜிதேந்திரா குமார், லேன்ஸ் நாயக் விவேக் குமார், லேன்ஸ் நாயக் சாய் தேஜா ஆகிய 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க இந்திய விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இந்த விசாராணை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங், ஏர் ஆஃபிசர் கமாண்டிங் இன் சீஃப் ஆகியோர் தலைமையில் இது நடக்கும்.
உயிரிழந்த முப்படைகளின் தலைவரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army Chief General Bipin Rawat, Helicopter Crash, Indian army