இந்தியாவில் ஆண்கள் எண்ணிக்கையைவிட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாட்டில் ஒரு தலைமுறையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை அடுத்த தலைமுறையில் ஈடுசெய்ய, பெண்களின் சராசரி கருத்தரிப்பு விகிதாச்சாரம் 2.1 ஆக இருக்க வேண்டும். 2005-06ம் ஆண்டு ஆய்வின் படி இந்தியாவில் 2.7 ஆக இருந்த இந்த விகிதாச்சாரம், 2015-16ல் 2.2 ஆக சரிந்தது.
இந்நிலையில், 2019- 2021ம் ஆண்டிற்கான கருத்தரித்தல், குழந்தைகள் நலன் மற்றும் ரத்தசோகை தொடர்பான, தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், கருத்தடை செய்யப்படும் விகிதம் பஞ்சாபை தவிர பிற மாநிலங்களில் 54-லிருந்து 67 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதோடு, கருக்கலைப்பு செய்வதும் அதிகரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இந்திய பெண்களின் சராசரி கருத்தரிப்பு விகிதாச்சாரம் 2 ஆகக் குறைந்துள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் பெண்களின் கருத்தரிப்பு விகிதாச்சாரம் 1.6 ஆகவும், கிராமப்புறங்களில் 2.1 ஆகவும் குறைந்துள்ளது. பெரிய மாநிலங்களான, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் மட்டுமே, பெண்களின் கருத்தரிப்பு விகிதாச்சாரம் 2.3-க்கும் அதிகமாக உள்ளது.
மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இந்த விகிதம் சரிவையே சந்தித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும்1.7-லிருந்து 1.8 ஆக அதிகரித்துள்ளது. கருத்தரிப்பு விகிதாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள இத்தகையை சரிவு, அடுத்த தலைமுறை மக்கள் தொகை உயர்வை கடுமையாக பாதிக்கக் கூடும்
இதனிடையே, ஆயிரம் ஆண்களுக்கான பெண்களின் பாலின விகிதாச்சாரம், நாட்டில் ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்த விகிதம் தமிழகத்தில் 878 ஆக சரிந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்கள் பிறந்தால் 878 பெண் குழந்தைகளே பிறக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால், அடுத்த தலைமுறை தொழில்துறை பாதிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, நாட்டில் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் 89 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் 100 சதவிகிதத்தை எட்டியுள்ளது. குழந்தைகளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் 64 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் 50 சதவிகித பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பதாகவும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.