கேரளாவில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. 10 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மழை குறைந்தது. இதனால், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மீண்டும் மழை பெய்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் மலப்புரம் மாவட்டத்தில் 11 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 24 பேர் உயிரிழந்தனர். இதனால், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75-ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஒன்றரை லட்சம் பேர், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால், நிலைமை மோசமடையும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களுக்கும் மழை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்படையின் 21 குழுக்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள், 18-ம் தேதிவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சபரிமலையில் உள்ள ராமமூர்த்தி மண்டபம் நீரில் மூழ்கியுள்ளது.
புனலூர், செங்கோட்டை இடையேயான ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், கேரளாவுக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலிலிருந்து செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள், நாகர்கோவில் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், திரிசூர், வயநாடு, மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தொடர்புகொண்ட முதலமைச்சர் பினராயி விஜயன் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.