ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்போரின் இறப்பு சான்றிதழிலும் மோடி படம் இடம்பெறுமா? - மஹூவா மொய்த்ரா கேள்வி

மஹூவா மொய்த்ரா

ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களுக்காக இறக்குமதி வரியையும், தடுப்பூசிக்கான இறக்குமதி வரியையும் மூன்று மாதத்துக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. படுக்கை வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், ரெம்டெசிவர் மருத்துக்கான தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் என நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

  இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

  இந்நிலையில் மேற்கு வங்க த்ரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படம் இருப்பது போன்று ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்போரின் இறப்பு சான்றிதழிலும் பிரதமர் மோடி புகைப்படம் இடம்பெறுமா? என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சுட்டிக்காட்டும் விதமாக அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

     கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை  ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.  அதில் “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுத் தாக்கல் செய்திருந்தது.”

  இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம். மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்" மத்திய அரசை கடுமையாக கேட்டுக்கொண்டது.

  ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களுக்காக இறக்குமதி வரியையும், தடுப்பூசிக்கான இறக்குமதி வரியையும் மூன்று மாதத்துக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

   
  Published by:Ramprasath H
  First published: