DAYS AFTER QUITTING ASSAM MLA WHO WASNT NAMED FOR POLLS RETURNS TO BJP ARU
பாஜகவில் இருந்து விலகிய இரண்டே நாட்களில் மீண்டும் பாஜகவிலேயே இணைந்த அசாம் எம்.எல்.ஏ!
எம்.எல்.ஏ ஷிலாதித்யா தேவ்
அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் திலிப் சைகியா ஆகியோர் ஷிலாதித்யா தேவ்-ஐ அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசினர். இதனையடுத்து சமரச பேச்சின் இறுதியில் ஷிலாதித்யா தேவ் மீண்டும் பாஜகவில் இணைவதாக கூறினார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் மீண்டும் பாஜகவிலேயே இணைந்துள்ளார்.
ஒவ்வொரு தேர்தல் சமயத்தின் போதும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் போது ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் அதிருப்திக்கு ஆளாவது சகஜமான ஒன்று தான். அந்த வகையில் அசாமில் அமைச்சர் உட்பட 12 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு பாஜக வாய்ப்பளித்தது.
தனக்கு சீட் வழங்காமல் ராமகிருஷ்ணா கோஷ் என்பவருக்கு வழங்கியதால், அதிருப்தி அடைந்த Hojai தொகுதி எம்.எல்.ஏ ஷிலாதித்யா தேவ், பாஜகவில் இருந்து கடந்த மார்ச் 11ம் தேதி விலகுவதாக அறிவித்தார். விலகல் கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்த போது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருக்கிறேன். கட்சியிலிருந்து விலகுவது என்பது மிகவும் கனத்த மனதுடன் எடுத்த முடிவு. பழைய தலைவர்களை ஓரங்கட்டும் பணிகள் அசாம் பாஜகவில் நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் Hojai தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.
இதனிடையே அசாம் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் திலிப் சைகியா ஆகியோர் ஷிலாதித்யா தேவை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து பேசினர். இதனையடுத்து சமரச பேச்சின் இறுதியில் ஷிலாதித்யா தேவ் மீண்டும் பாஜகவில் இணைவதாக கூறினார்.
இது தொடர்பாக ஷிலாதித்யா தேவ் கூறுகையில், “காங்கிரஸ் வெற்றி பெறுவதை என்னால் அனுமதிக்க முடியாது, அப்படி வெற்றி பெற்றால் கூட்டணியில் உள்ள AIUDF தலைவர் பத்ருதின் அஜ்மலின் அராஜகத்திற்கு அது வழிவகுக்கும், எனவே நான் பாஜகவில் தொடர விரும்புகிறேன்” என்றார்.
Hojai தொகுதியானது ஹிந்து வங்காளிகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டதை தொடர்ந்து இத்தொகுதி பாஜகவின் கோட்டையாக மாறியுள்ளது. இதனிடையே வாக்குகள் சிதறுவதை தடுக்கும் பொருட்டு அதிருப்தியில் உள்ளவர்களிடம் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் Diphu (ST) தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்காததால் அமைச்சர் Sum Ronghang பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அங்கு அவருக்கு இதே தொகுதில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.