ஆர்ய சமாஜத்தின் நிறுவனரான தயானந்த சரஸ்வதி, இந்தியாவின் சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள், தத்துவவாதிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் 1824 ஆம் ஆண்டு கிருஷ்ண பக்ஷத்தில் பால்குன் மாதம் 10 ஆம் தேதி பிறந்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தயானந்த சரஸ்வதியின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இவர் அனைத்து சமுதாயத்திற்கு உத்வேகமாக இருந்துள்ளார். சமூக சீர்திருத்தவாதியான இவர், பாலின சமத்துவம் மற்றும் கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக போராடினார். கர்மா மற்றும் மறுபிறப்புகளின் கொள்கைகளை ஆதரித்தவர். ஆனால் மூடநம்பிக்கைகளை வெறுத்து ஒதுக்கினார். இவர் 'நவீன இந்தியாவின் தயாரிப்பாளர்' என்றும் மக்களால் அழைக்கப்பட்டார்.
தயானந்த சரஸ்வதியின் ஆரம்பகால வாழ்க்கை:
தயானந்த சரஸ்வதி குஜராத்தின் மோர்பிக்கு அருகில் உள்ள தங்கராவில் பால்குண கிருஷ்ண பக்ஷத்தின் தசமி திதியில் பிறந்தார். அவர் முன்னதாக மூல் சங்கர் திவாரி என்று அழைக்கப்பட்டார். மேலும் இவர் மூல நட்சத்திரத்தில் பிறந்ததால் மூலவர் என்று பெயர் பெற்றார்.
அவரது பெற்றோர்கள் சிவபக்தர்களாக இருந்ததால், அவர் கடுமையான மதச் சூழலில் வளர்க்கப்பட்டார். பின்னர் 20 வயதில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் பின்னர் திருமணம் தனக்கானது இல்லை என்பதை உணர்ந்தார். எனவே, ஆன்மிகத்தைத் தேடி சென்றார். 25 வருடங்கள் இடம் விட்டு இடம் அலைந்து திரிந்தார். துறவு வாழ்க்கையை வாழத் தொடங்கிய அவர் ஆன்மீகத்தில் தன்னை அர்ப்பணித்தார். பின்னர், அவர் சுவாமி விராஜானந்த் தண்டீஷாவைச் சந்தித்து அவருடைய சீடரானார்.
அந்த சமயம், சனாதன தர்மம் பல நூற்றாண்டுகளாக அதன் வேர்களிலிருந்து விலகிவிட்டதாகவும், பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் நான்கு வேதங்களுக்கும் எதிரானவை என்பதையும் தயானந்த சரஸ்வதி உணர்ந்தார். இந்த வேதங்கள் அனைத்து நடைமுறைகளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும் சிலை வழிபாடு, மிருக பலி, குழந்தை திருமணம் மற்றும் புனித யாத்திரைகளுக்கு எதிரானவர். எனவே, அவர் தனது சொந்த எண்ணங்களைப் பிரசங்கிக்கத் தொடங்கினார் மற்றும் இந்தியா முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றார்.
பாலின சமத்துவத்திற்காகவும் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகளுக்காகவும் தயானந்த சரஸ்வதி பாடுபட்டார். குழந்தைகளின் கல்விக்காகவும் பாடுபட்டார். ஸ்வராஜ் (சுய ஆட்சி)க்கான அவரது அழைப்பு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அப்போது ஒரு உத்வேகமாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதனை தொடர்ந்து, 1875ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையின் மதிப்புகளை மேம்படுத்துவதற்காக ஆர்ய சமாஜத்தை நிறுவினார்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.