ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலித் பெண் தண்ணீர் குடித்ததால் கோமியத்தால் தொட்டியை சுத்தம் செய்த மக்கள்

தலித் பெண் தண்ணீர் குடித்ததால் கோமியத்தால் தொட்டியை சுத்தம் செய்த மக்கள்

ஊருக்கு பொதுவாக உள்ள தண்ணீர் தொட்டியில் தலித் பெண் ஒருவர் தண்ணீர் குடித்ததால் அந்த தொட்டியை கோமியம் கொண்டு கிராம மக்கள் சுத்தம் செய்த அவலம் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mysore, India

  தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமும் நடைபெறக் கூடாது என்பதற்காக என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் நவீன தீண்டாமை சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் அண்மைக்காலமாக கர்நாடகாவில் இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு சாமிசிலையை ஒரு தலித் சிறுவன் தொட்டுவிட்டான் என்பதற்காக அந்த குடும்பத்திற்கு கிராமத்தினர் அபராதம் விதித்த சம்பவம் நிகழ்ந்து அனைவரையம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பரபரப்பு அடங்குவதற்குள் அங்கு மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

  கடந்த வெள்ளிக்கிழமை மைசூரு அருகே உள்ள சாகுர் என்ற கிராமத்தில் இருந்து ஒரு தலித் பெண், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹெக்கோதாரா என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது கிராமத்தில்  இருந்த பொது தண்ணீர் தொட்டியில் அந்தப்பெண தண்ணீர் குடித்ததாக சொல்லப்படுகிறது.  மற்ற சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அந்தக் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் பொது தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்ததால் அந்த தொட்டி தீட்டுப்பட்டுவிட்டதாக கூறி கிராமத்தில் இருக்கும் சிலர் தொட்டியில் இருந்த தண்ணீர் அத்தனையும் வெளியேற்றிவிட்டு  கோமியம் கொண்டு தொட்டியை சுத்தம் செய்துள்ளனர்.

  இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கைஅளிக்க  வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

  ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் சாம்ராஜ்நகர் புறநகர் காவல் நிலையத்தில் கிரியப்பா என்பவர் புகார் ஒன்றை அளித்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதே நேரம், உறுதி செய்யப்படாத இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Also read : உஷார்.! சளி, காய்ச்சல் மருந்துகளில் 50 போலிகள்.. இதுதான் முழு லிஸ்ட்!

  இது தொடர்பாக ஹெக்கோதாரா கிராமத்தில மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து சாதியினரும் கலந்து கொண்டு சமரசக் கூட்டம் நடைபெற்றது. சாதியைக் காரணம் காட்டி, கோவில் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டாலோ, பொது உரிமைகள் பெறப்படுவது தடுக்கப்பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

  இந்த சர்ச்சைக்குப் பிறகு தலித் மக்களுக்கு அதே தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது என கர்நாடக அமைச்சர் சோமன்னா உறுதியிளித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Karnataka