டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரான ரத்தன் லால் என்பவரை நேற்று இரவு கைது செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து பேராசிரியர் ரத்தன் லால் சமூக வலைத்தளத்தில் கண்டனத்திற்குரிய பதிவு வெளியிட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.
டெல்லியைச் சேர்ந் வினீத் ஜிந்தால் என்ற வழக்கறிஞர் பேராசிரியர் லால் மீது அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இபிகோ 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக புகார் அளித்துள்ள வழக்கறிஞர் கூறுகையில், பேராசிரியர் லால் பதிவிட்டுள்ள கருத்து பிறரின் உணர்வை புண்படுத்தி தூண்டும் விதமாக உள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை அவர் மீது மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். தனது பதிவு தொடர்பாக ரத்தன் லால் கூறுகையில், 'இந்தியாவில் நீங்கள் என்ன பேசினாலும் யாரவது புண்படத்தான் செய்வார்கள். இது ஒன்றும் புதிது அல்ல. நான் ஒரு வரலாற்று ஆசிரியர். எனக்கென சில பார்வைகள் உள்ளன. அதை நான் எழுதியுள்ளேன். நான் கண்ணியமான முறையில் தான் அதை வெளிப்படுத்தியுள்ளேன். எனவே, நான் தவறு ஏதும் செய்யவில்லை' என்றார். ரத்தன் லால் கைதுக்கு பல்வேறு ஆர்வளர்களும், தலித் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள கியான்வாபி மசூதியில் இந்து கோயில் உள்ளதாகவும் இது தொடர்பாக கள ஆய்வு செய்ய வேண்டும் என இந்து அமைப்பு வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் கள ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:
4 தலைமுறைகளை தாண்டிய 108 ஆண்டு வழக்கிற்கு ஒரு வழியாக தீர்ப்பு கிடைத்தது
இந்த கள ஆய்வின் போது மசூதியின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் இருந்ததாக ஆய்வின் தகவல் கசிய இது பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட இடத்தை சீல் வைத்து மூட மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை, அந்த மசூதியில் இஸ்லாமியர்கள் வழக்கம் போல் தொழுகை நடத்த எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.