மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ஸ்வாஹா பகுதியில் உயிரிழந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டுவர ஆம்புலன்ஸ் கிடைக்காததால் குடும்பத்தினர் தோளில் சுமந்து கொண்டு நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 6ஆம் தேதி அரங்கேறியுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள போன்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மன் அஹிர்வார். தலித் சமூகத்தை சேர்ந்த இவரின் 4 வயது பெண் குழந்தைக்கு சில நாள்களுக்கு முன் தீவிர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகே உள்ள பக்ஸ்வாஹா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அருகே உள்ள தமோஹ் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
இவர்களின் சொந்த கிராமம் நான்கு கிமீ தொலைவில் உள்ள நிலையில், குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல இவர்கள் குடும்பத்தினர் ஆம்புலான்ஸ் ஏற்பாடு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனையில் இவர்களிடம் ஆம்புலன்ஸ் இல்லை எனக் கூறி மறுத்துவிட்டனர். பின்னர் ஆட்டோ ரிக்ஷா போன்ற வாகனத்திற்கும் இவர்கள் முயற்சி செய்தி நிலையில், எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நேரம் ஆக ஆக என்ன செய்வது என்று தெரியாமல் விரக்தி அடைந்த குழந்தையின் குடும்பத்தினர், உயிரிழந்த குழந்தையின் உடலை தோளில் சுமந்து தங்கள் கிராமம் வரை நடந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:
பாஜகவை தோற்கடிக்க சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு கரம் நீட்டிய ஓவைசி கட்சி
குழந்தையின் உடலை தோளில் சுமந்து செல்லும் இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இவர்கள் சிறிது தூரம் நடந்தே சென்ற நிலையில், அவர்களை கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் உறுதி அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.