பாவாடைக்குள் மறைத்து ரூ.1.7 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - அதிகாரிகள் கண்டுபிடிப்பு!

போதைப்பொருள்

MDMA போதைப்பொருட்கள் பேரானந்தம் என பொருள்படக்கூடிய எக்ஸ்டஸி (‘ecstasy’) என அழைக்கப்படுகின்றன. உணர்ச்சிகளை மடைமாற்றவும், சக்தியை அதிகரிக்கவும் இந்த போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • Share this:
லெஹங்கா பாவாடைக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த1.7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு லெஹங்கா பாவாடைகள் அடங்கிய சரக்கு பெட்டி ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது. அப்போது, உளவுத்துறைக்கு, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப தயாராக உள்ள லெஹங்கா துணிகளுக்குள் MDMA போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு (PFO) சென்றனர். அங்கிருந்த பெட்டிகளை ஆய்வு செய்தபோது ஒரு பெட்டியில் லெஹங்கா துணிகள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்தது.

அந்த துணிகளை சோதனைக்குட்படுத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நம்ப முடியாத வகையில் மிக நுட்பமான வேலைப்பாடுகளுக்கு இடையே போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு கண்களை கவரும் துணிகளாக இருந்தாலும், அதில் 3,920 கிராம் அளவுள்ள MDMA போதைப்பொருளை கண்டறிந்தனர். இது தொடர்பாக டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், டெல்லியில் உள்ள எப்.பி.ஓவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல இருந்த ஒரு பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும், அதில் இருந்து 3920 கிராம் போதைப்பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். சந்தை மதிப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 1.7 கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறினர்.

பொதுவாக, MDMA போதைப்பொருட்கள் பேரானந்தம் என பொருள்படக்கூடிய எக்ஸ்டஸி (‘ecstasy’) என அழைக்கப்படுகின்றன. உணர்ச்சிகளை மடைமாற்றவும், சக்தியை அதிகரிக்கவும் இந்த போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. MDMA போதைப்பொருளை எடுத்துக்கொள்ளக் கூடியவர்களின் கிட்னி, கல்லீரல் ஆகியவை பாதிக்கப்படும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளக்கூடியவர்கள் மரணிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இதேபோல் மற்றொரு சோதனையில், இறக்குமதி செய்யப்பட்ட 6 கோடி ரூபாய் மதிப்பிலான 60 லட்சம் சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
Published by:Arun
First published: