உணவுப்பொருட்களின் விலைவாசி எகிறி வருவதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே கவலை தெரிவித்துள்ளார், இதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார்.
உணவுப்பொருட்களின் விலைவாசி எகிறி வருவதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே கவலை தெரிவித்துள்ளார், இதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார்.
புது டெல்லியில் விவசாயம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் ஹொசபலே பேசும்போது, “விலைவாசி உயர்வு மிகப்பெரிய பிரச்சனை. இது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை உயர்ந்தால், அதை ஏற்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர். அதே நேரத்தில் மிகவும் அடிப்படையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் விலை உயர்வதை மக்கள் விரும்பவில்லை.
கடந்த 75 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி, நாம் பெருமைப்படக் கூடிய வகையில் உள்ளது. உணவு பொருட்களுக்கு கையேந்தும் நிலையில் இருந்த நாம், தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளோம். அதே நேரத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். விவசாயத்தை மக்கள் நாடும் வகையில் அந்த தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் படையெடுப்பதை தடுக்க முடியும்.
மழை போன்ற இயற்கை இடர்பாடுகளை சந்திக்கும் விவசாயிகள், இடுபொருட்கள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற வேண்டும்.சமூகத்திலும் அவர்களுக்கு சரியான அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக இருந்து விடக் கூடாது.
பணவீக்கத்துக்கும் உணவுப்பொருள் விலை உயர்வுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆராய வேண்டும். அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவு கிடைக்க வேண்டும். எனவே ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் விலை உயரக்க்கூடாது. இதில் அரசு கூட்டுறவு சாலைகளுக்குப் பங்கிருக்கிறது. அனைவருக்கும் ஊட்ட உணவு செல்ல இடைவெளிகளை அடைக்க வேண்டும்.
இந்திய மக்கள் தொகையில் 52% நகரங்களில் வசிக்கின்றனர், இது மாற வேண்டும். கிராமங்கள் மறையத் தொடங்கினால் நாம் பெருமையாகப் பேசும் பண்பாடு, நாகரீகம் அழிந்து விடும். கிராமங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். வேளாண் தொழிலையும் அதுதொடர்பான தொழிற்சாலைகளையும் வளர்க்க வேண்டும்” என்றார் ஹொசபலே.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.