மேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி - எதிர்கட்சிகள் விமர்சனம்

மோடி

இதுவரை இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை தான் பார்த்ததில்லை என்று மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • Share this:
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும் 3 கட்ட வாக்குப்பதிவு எஞ்சியுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவலுக்கு மத்தியிலும் அங்கு கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மேற்குவங்க மாநிலம் அசான்சால் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “கடந்த 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது 2 முறை நான் அசான்சாலுக்கு வந்துள்ளேன். கடந்த முறை பபுல் சுப்ரியோவிற்காக வாக்கு சேகரிக்க வந்தேன். அவர் இப்போது எம்.பியாக உள்ளார். முதல் முறையாக எனக்காக இங்கே வந்த போது இப்போது உள்ள கூட்டத்தில் நான்கில் ஒரு பங்கு கூட்டம் தான் பார்த்தேன்.

ஆனால் இன்று அனைத்து திசைகளிலும் திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். இதுவரை இப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்ததேயில்லை, இது தான் முதல் முறை. இன்று உங்கள் சக்தியினை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அடுத்த கட்டமாக நீங்கள் அனைவரும் சென்று வாக்களிக்க வேண்டும் அது தான் முக்கியம், மற்றவர்களையும் வாக்களிக்க கூட்டிச் செல்லுங்கள்” இவ்வாறு பிரதமர் பேசினார்.

7ம் கட்டமாக அசான்சாலில் ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற உள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனாவின் 2ம் அலைக்கு மத்தியிலும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருவதை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பிரதமர் மோடி மேற்குவங்கத்தில் பரப்புரை செய்ததை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நாட்டிலேயே அதிகம் பேர் பாதிப்புக்கு ஆளாவதும், உயிரிழப்பை சந்தித்து வருவதும் இது தான் முதல் முறை” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா பாதிப்பு குறித்து பேச பிரதமர் மோடியை தொடர்பு கொண்டதாகவும், அவர் மேற்குவங்கத்தில் பரப்புரையில் இருப்பதாக அவருக்கு பதில் கிடைத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பாஜகவின் சமூக ஊடக பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பரப்புரை கூட்டத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜகவினர் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்த நிலையில் அமர்ந்துள்ளதை காண முடிந்தது..
Published by:Arun
First published: