ஊரடங்கு அச்சம்... காற்றில் பறந்த சமூக இடைவெளி - மும்பை ரயில் நிலையங்களில் அலைமோதும் புலம்பெயர் தொழிலாளர்கள்

ஊரடங்கு அச்சம்... காற்றில் பறந்த சமூக இடைவெளி - மும்பை ரயில் நிலையங்களில் அலைமோதும் புலம்பெயர் தொழிலாளர்கள்

ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்

சரியான டிக்கெட் மற்றும் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 • Share this:
  மகாராஷ்டிராவில் மீண்டும் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல தொடங்கிவிட்டனர்.

  கடந்தாண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதில் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தினக்கூலிகளாக ஊர் விட்டு ஊர் வந்தவர்களுக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இங்க யாரும் இல்லை. கஷ்டமோ நஷ்டமோ எதையும் எதிர்க்கொள்ள  வேண்டிய சூழல். ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைதான் இருந்தது. வேலை இல்லையென்றால் குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும் சாப்பிட்டாக வேண்டுமே குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை வழங்க வேண்டும். சில நாள்களில் ஊரடங்கை திரும்ப பெற்றுவிடுவார்கள் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  தேசிய நெடுஞ்சாலையில் பயணப்பட்ட அந்த மக்கள் கூட்டத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா. கொளுத்தும் வெயிலில் கையில் இருக்கு மிச்சப்பணத்தை எடுத்துக்கொண்டு கால்நடையாகவும், சைக்கிள், மோட்டார் சைக்கிள் வழியாக பயணித்த மக்களின் துயரங்கள் சொல்லில் அடங்குமா. சில மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு சிறு சிறு தளர்வுகளை ஏற்படுத்தியது. இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பியது. கடந்தாண்டு ஒரு மோசமான கனவு என நினைத்திருந்த மக்களுக்கு மீண்டும் அந்த கசப்பான செய்தி வந்தது.

  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது.  மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அங்கு இரவு நேர ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனால் மீண்டும் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

  இதன்காரணமாக மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.  விவேக் தாக்கூர் என்ற தொழிலாளர் பேசுகையில், “ இது இரண்டாவது தடவை நான் உத்தரப்பிரதேசத்துக்கு செல்வது. நான் இங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தேன். தற்போது அது மூடப்பட்டுள்ளது. அதன்காரணமாக நான் சொந்த ஊருக்கு செல்கிறேன். அங்கு குடும்பத்தினருக்கு விவசாய பணிகளில் உதவி செய்ய செல்கிறேன்.’ என்றார். மற்றொரு இளைஞர் பேசுகையில், “ ஆன்லைனில் டிக்கெட் எடுக்கலாம் என முயற்சி செய்தேன் முடியவில்லை. நேரில் வந்தால் டிக்கெட் புக் செய்ய வாய்ப்பு இருக்குமா எனப் பார்க்கத்தான் வந்தேன். அடுத்த சில நாள்களுக்கு ரயில்கள் ஃபுல்லாக தான் இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

  நிறைய குடும்பங்கள் இந்த கூட்டத்தில் வரிசையில் காத்துக்கிடக்கின்றன. இந்த வரிசையில் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. பொதுஇடங்களில் மாஸ்க் அணியாத நபர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்தக்கொண்டிருந்தனர். பல பயணிகளை தங்களது ரயில்களுக்காக ஸ்டேஷனுக்கு வெளியில் காத்திருக்கின்றனர். காவல்துறையினர் தொடர்ந்து அந்தப்பகுதியில் அறிவிப்புகளை கூறி வருகின்றனர். சரியான டிக்கெட் மற்றும் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

  மும்பையில் முக்கியமான ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் அதிக பயணிகள் கூடுவதை தடுப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காத விரக்தியில் பலர் ரயில்நிலையத்துக்கு வெளியே காத்துகிடக்கின்றனர்.
  Published by:Ramprasath H
  First published: