வழக்கத்திற்கு மாறாக திரிணாமுல் காங்கிரஸுக்கு பதில் பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் பிரபலம்!

மேற்குவங்க தேர்தல்:

சமீபத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் மதவாத தலைவரான அப்பாஸ் சித்திக்கின் ISF உடன் இணைந்தது. இக்கட்சியை கூட்டணியில் சேர்த்ததற்கு சங்கர் கோஷ் கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

  • Share this:
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் நிலையில் வழக்கத்திற்கு மாறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கான தலைவர் ஒருவர் பாஜகவில் இன்று இணைந்துள்ளார்.

மேற்குவங்க தேர்தல் பரபரப்பு 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தொடங்கிவிட்டது. அதுவரை மேற்குவங்கத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக விளங்கிய பாஜக அசுர வளர்ச்சியை எட்டிப்பிடித்தது இந்த தேர்தலில் தான். அதன் பின்னர் மாநிலத்தில் பாஜக மீதான பார்வை முற்றிலும் மாறி திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், வலதுசாரி கட்சிகளின் பிரதான போட்டியாளராக உருவெடுத்தது அக்கட்சி. அமைச்சர் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்த பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து தலைவர்கள் விலகி பாஜகவில் இணைவது அன்றாட நிகழ்வாகி விட்டது. நேற்று கூட அக்கட்சியில் இருந்து அமைச்சர் பச்சு ஹன்ஸ்டா, எம்.எல்.ஏ கவுரி சங்கர் தத்தா, பெங்காலி நடிகர் போனி சென்குப்தா, எம்.பி பிரதிமா மொந்தலின் சகோதரி ஜெயஸ்ரீ மொந்தல் ஆகியோர் விலகி பாஜகவில் இணைந்தனர்.

இதனிடையே இன்று வழக்கத்திற்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர் சங்கர் கோஷ் பாஜகவில் இணைந்துள்ளார். டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி செயலக உறுப்பினராக இருந்து வரும் சங்கர் கோஷ் நேற்று கட்சி தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு இன்று பாஜகவில் இணைந்துள்ளார். நேற்று கட்சியின் தலைமை மீது அதிருப்தி வெளிப்படுத்தியிருந்த நிலையில் அவர் இன்று கட்சி மாறியிருக்கிறார்.

சமீபத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் மதவாத தலைவரான அப்பாஸ் சித்திக்கின் ISF உடன் இணைந்தது. இக்கட்சியை கூட்டணியில் சேர்த்ததற்கு சங்கர் கோஷ் கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு சிபிஎம்-க்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகல் முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிபிஎம் கட்சியின் இளம் தலைவர் அசோக் பட்டாச்சார்யாவின் வலதுகரமாக அறியப்படும் சங்கர் கோஷின் ராஜினாமா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Published by:Arun
First published: