படுக்கையில் அமர்ந்த நிலையில் கொரோனா நோயாளி உயிரிழந்த அவலம்: உறவினர்கள் போராட்டம்!

படுக்கையில் அமர்ந்த நிலையில் கொரோனா நோயாளி உயிரிழந்த அவலம்: உறவினர்கள் போராட்டம்!

கொரோனா நோயாளி உயிரிழந்த அவலம்

அடுத்த நாளான நேற்று (புதன்) குடும்பத்தினர் அந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் படுக்கையில் அமர்ந்த நிலையில் அசைவில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவரை அழைத்து வந்தனர்.

  • Share this:
கொரோனா நோய்த்தொற்றின் 2ம் அலை கட்டுக்கடங்காத வகையில் பரவி வருகிற நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், ஆக்ஸிஜன், படுக்கை வசதி, ஐசியூ, ரெம்டெசிவிர் மருந்து போன்ற வசதிகள் ஏதும் கிடைக்காமல் இன்னலை சந்தித்து வருவதாகவும், உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அன்றாடம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள ஒரு கொரோனா மரணம் கலங்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு படுக்கை வசதி கிடைத்த நிலையில் மருத்துவர்கள் யாரும் கவனிக்காததால் உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அவர் மருத்துவமனையின் படுக்கையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்ட தலைநகரான ஜல்பைகுரியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கடந்த செவ்வாக்கிழமை மாலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபரை அன்றைய தினமே மாவட்டத்தின் ஒரே கொரோனா சிறப்பு மருத்துவமனையான பிஸ்வபங்களா கிரிரங்கன் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதன் பின்னர் குடும்பத்தினர் தங்களின் வீட்டுக்கு திரும்பிவிட்டனர்.

அடுத்த நாளான நேற்று (புதன்) குடும்பத்தினர் அந்த மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் படுக்கையில் அமர்ந்த நிலையில் அசைவில்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவரை அழைத்து வந்தனர். மருத்துவர் மற்றும் செவிலியர் சென்று பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனிடையே மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து அவருக்கு யாருமே சிகிச்சை செய்யவில்லை எனவும், ஆக்ஸிஜனும் வழங்கப்படவில்லை என கூறி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தை தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,14,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,104 பேர் பலியாகினர். ஒரே நாளில் உலகிலேயே அதிக கொரோனா தொற்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,59,30,965 ஆக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கை 1,84,662 ஆக அதிகரித்துள்ளது.
Published by:Arun
First published: