இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம் அடைவதும், வீழ்ச்சி அடைவதும் எப்போது? - விஞ்ஞானிகள் கணிப்பு

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம் அடைவதும், வீழ்ச்சி அடைவதும் எப்போது? - விஞ்ஞானிகள் கணிப்பு

கொரோனா 2வது அலை

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம் அடைவதும், வீழ்ச்சி அடைவதும் எப்போது என கணித மாதிரிகளை கொண்டு விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

  • Share this:
இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 80,000ஐ கடந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக நோய்த்தொற்று இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி)-ன் மனிந்திர அகர்வால் உள்ளிட்ட விஞ்ஞானிகள், தற்போதைய தொற்றுநோய் பரவலை SUTRA என்ற மாதிரியைப் பயன்படுத்தி கணித்துள்ளனர். இதன் மூலம் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வரும் ஏப்ரல் மாத மத்தியில் உயரக்கூடும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக விஞ்ஞானி மனிந்திர அகர்வால் கூறுகையில், “ இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் 15 - 20-க்கு இடையே உச்சத்தை தொடக் கூடும் என்று கடந்த சில நாட்களாக ஆராய்ந்து கணித்துள்ளோம். இருப்பினும் மிக விரைவாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரியக்கூடும் என்பதையும் நாங்கள் கணித்துள்ளோம். வரும் மே மாத இறுதியில் கொரோனாவால் பாதிப்படைவோரின் தினசரி எண்ணிக்கை சரியக் கூடும். மேலும் நாட்டிலேயே முதல் மாநிலமாக பஞ்சாபில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும், இதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா உச்சம் அடையும்.

தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவில் இருக்கலாம் என்பதே தற்போதைய கணிப்பாக இருக்கிறது. இருப்பினும் இந்த எண்ணிக்கை சிறிது அதிகரிக்கவோ, குறையவோ செய்யலாம் . ஆனால் உறுதியாக கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏப்ரல் 15-30 வாக்கில் உச்சமடையும்” என மனிந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.

மனிந்திர அகர்வால் மட்டுமல்லாது சில தனிப்பட்ட விஞ்ஞானிகளும் கொரோனா பரவலின் உச்சம், வீழ்ச்சியை கணித்துள்ளனர். ஹரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழகத்தின் கவுதம் மேனன், கொரோனா பரவலில் 2ம் அலை ஏப்ரல் மத்தி முதல் மே மத்தி வரை உச்சமடையக்கூடும் என கணித்துள்ளார். இருப்பினும் இது போன்ற கணிப்புகள் குறுகிய கால அளவில் மட்டுமே நம்ப வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசின் தகவல்படி இந்தியாவில் இதுவரை 1,23,03,131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Published by:Arun
First published: