கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பாதுகாப்பானது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்கும் வகையில், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும் முன்பே, இத்தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் கோவாக்சின் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பினர். கோவாக்சின் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என, லான்செட் மருத்துவ இதழின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து குறித்த முதற்கட்ட ஆய்வில், 18 முதல் 55 வயது வரையிலான 375 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பு மருந்தால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படவில்லை எனவும், லேசான தலைவலி, காய்ச்சல், சோர்வு போன்ற சாதாரண பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட 375 பேரில், 44 பேருக்கு மட்டுமே லேசான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 3ம்கட்ட பரிசோதனையில், 13 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு வெற்றிகரமாக இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக மேலாளர் சுசித்ரா எல்லா தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே அசாம் மாநிலம் ஷிவ் சாகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் அசாம் மாநிலத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என நம்பிக்கை உள்ளதாகவும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
https://twitter.com/ANI/status/1352867016126861317
இந்நிலையில் உலக நாடுகளில் இந்தியாவில் மிகவேமாக 6 நாட்களில், 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 10 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.