Covaxin: கோவேக்சின் தடுப்பூசியில் பசுவின் ரத்தம் பயன்படுத்தப்படுகிறதா?: மத்திய அரசு விளக்கம்!

Covaxin

உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே வீணான அச்சம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • Share this:
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளினல் உள்நாட்டின் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பில் பசுவின் கன்றுகளை வெட்டி அதில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் சீரம் எனப்படும் பொருள் கலக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.

கொவேக்சின் மருந்து தயாரிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் உண்மைக்கு மாறாக பரப்பப்பட்டு வந்தன. இதில் சில தேவையில்லாத அச்சத்தை மக்களிடம் விதைக்கும் நோக்கில் இருந்தது.

கோவேக்சின் தடுப்பூசி மருந்தில் புதிதாக பிறந்த பசுவின் சீரம் என்ற பொருள் கலக்கப்படுகிறது என்பதை ஆர்.டி.ஐ மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மோடி அரசு ஒத்துக்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்காக பசுவின் கன்றுகள் கொல்லப்படுகின்றன, பிறந்து 20 நாட்களே ஆன பசுக்கன்றுகளை வெட்டி அதில் இருந்து வெளியேறும் ரத்தத்தை உறைந்த பின்னர் எடுக்கப்படுவது தான் சீரம். இது மிகவும் முக்கியமான தகவல். இத்தகவலை பொதுமக்களிடம் முன்பே தெரிவித்திருக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பதி என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Also Read:   கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயலால் கோகோ கோலா நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

இது போன்ற உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே வீணான அச்சம் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மத்திய அரசு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி தொடர்பான உண்மைகள் திரிக்கப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

பிறந்த பசுவின் சீரம் என்பது வெரோ செல்களின் உற்பத்தியில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு வகையான போவின் மற்றும் பிற விலங்கு சீரம் ஆகியவை வெரோ செல் வளர்ச்சிக்கு உலகளவில் பயன்படுத்தப்படும் நிலையான செறிவூட்டல் மூலப்பொருள் ஆகும். தடுப்பூசிகளின் உற்பத்திக்கு உதவும் செல் வாழ்க்கையை நிறுவ வெரோ செல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையானது ஆண்டாண்டு காலமாக போலியோ, ரேபிஸ் மற்றும் பிற வேக்ஸின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also Read:   வேலை தேடுபவரா? Apna மொபைல் செயலி பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

இந்த வெரோ செல்கள், வளர்ச்சிக்குப் பிறகு, புதிதாகப் பிறந்த பசு கன்று சீரம் இருந்து விடுபட பல முறை தண்ணீரில், ரசாயனங்கள் மூலம் கழுவப்படுகின்றன. அதன்பிறகு, இந்த வெரோ செல்கள் வைரஸ் வளர்ச்சிக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றன.

வைரஸ் வளர்ச்சியின் செயல்பாட்டில் வெரோ செல்கள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. அதன்பிறகு இந்த வளர்ந்த வைரஸும் கொல்லப்பட்டு (செயலிழக்கச் செய்யப்பட்டு) சுத்திகரிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட இந்த வைரஸ் பின்னர் இறுதி தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுகிறது, மேலும் இறுதி தடுப்பூசி உருவாக்கத்தில் கன்று சீரம் பயன்படுத்தப்படுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே இறுதியாக தயாரித்து வெளிவரும் கோவேக்சின் மருந்தில் பசுவின் சீரம் இருக்காது என மத்திய அரசு விளக்கம் தந்துள்ளது.
Published by:Arun
First published: