கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவேக்சின் தடுப்பூசி நாடு முழுவதும் அனுப்பி வைப்பு

கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவேக்சின் தடுப்பூசி நாடு முழுவதும் அனுப்பி வைப்பு

கோவேக்சின்

கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தொடர்ந்து, ஹைதராபாத்தில் இருந்து கோவாக்சின் தடுப்பு மருந்து விமானம் மூலம் டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

  • Share this:
    கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் வரும் 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக முதல்கட்டமாக சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து 56 லட்சம் டோஸ் நாடு முழுவதும் 13 நகரங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டன. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து 16 லட்சம் டோஸ்-கள் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து விமானம் மூலம் டெல்லி, சென்னை, குவஹாத்தி, பாட்னா, விஜயவாடா, பெங்களூரு, குருசேத்ரா உள்ளிட்ட 11 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    புதன்கிழமை காலை 6.50 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து 80 கிலோ எடை அளவிலான மூன்று பெட்டிகளில் கோவாக்சின் தடுப்பு மருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விஸ்தாரா விமானம் மூலம் 4 பெட்டிகளில் கோவாக்சின் தடுப்பு மருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டது. இதில், 20 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள தடுப்பு மருந்துகள் ஹரியானா மாநிலம் குருஷேத்ராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோன்று ஹைதராபாத்தில் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இதற்கிடையே, மாநில மருந்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கோவிஷீல்டு தடுப்பு மருந்து சாலை மார்க்கமாக சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டன.

    திருச்சி மண்டலத்தில் இருந்து 9 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அனுப்பும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், அவசியம் என்றால் தானும் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    கோவாக்சின் தடுப்பு மருந்தின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகததால், அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யும்வரை தடுப்பு மருந்து செலுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

    அதேநேரம், கொரோனா தடுப்பூசி பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

    கோவிஷீல்டு தடுப்பு மருந்து இரண்டாம் கட்டமாக புதன்கிழமை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி டெல்லிக்கு 34 பெட்டிகள், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு ஒன்பது பெட்டிகள், பரேலிக்கு 12 பெட்டிகள், மீரட்டுக்கு 13 பெட்டிகளில் தடுப்பு மருந்துகள் கொண்டு சேர்க்கப்பட்டன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: