கூலித் தொழிலாளியாக இருந்தாலும், வாராவாரம், தான் மிச்சம் பிடித்த சிறிய தொகையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வந்த ராஜன் மற்றும் அவரது மனைவி அம்புலியின் தற்கொலை கேரளாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பெற்றோர் தற்கொலை வழக்கில், போலீசார்தான் குற்றவாளிகள் என ராஜனின் 2வது மகன் ரஞ்சித் பேசும் காட்சி, கேரளாவை உலுக்கியுள்ளது. கேரள காவல்துறையின் இணையதளத்தை ஊடுருவிய ஹேக்கர்ஸ் இந்த வீடியோவை வெளியிட்டது எப்படி?
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அடுத்த நெல்லிமூடு பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்து உள்ளது. இந்த நெல்லிமூடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதான ராஜன் - 36 வயதான அம்புலி தாம்பதி. இவர்களுக்கு ராகுல் மற்றும் 17 வயதான ரஞ்சித் என இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜன் அங்குள்ள புறம்போக்கு நிலம் ஒன்றின் ஒரு பகுதியில் சிறிய கூரை வீடு அமைத்து வசித்து வந்துள்ளார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்மணி வசந்தா என்பவர், அந்த நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கில், வசந்தாவிற்கு சாதகமாக, ராஜன் வீட்டை ஜப்தி செய்யும்படி தீர்ப்பு வந்தது; தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி ராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ராஜன் வீட்டிற்கு சென்ற போலீசார், உடனடியாக வீட்டைக் காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்தனர். ஆனால் தனக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் இருப்பதை ராஜன் சுட்டிக் காட்டியும் போலீசார் கேட்கவில்லை.
அதனால், போலீசாரை மிரட்டி பின்வாங்கச் செய்வதற்காக, ராஜன் தன் மீதும் மனைவி அம்புலி மீதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு கையில் லைட்டரை எரிய வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அந்த நேரத்தில் முதலில் அவரது கையில் தீப்பற்றிய போது அவரே அதை அணைத்து விட்டார்.
அதற்குள் அருகில் இருந்த காவலர் ஒருவர் லைட்டரை தட்டி விட முயன்றபோது. லைட்டரில் எரிந்து கொண்டிருந்த தீ ராஜன் மீது பட்டு மளமளவென பற்றியது. அதனால் அருகில் இருந்த அம்புலியும் தீயில் சிக்கிக் கொண்டார்.
இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திங்கள் அன்று காலை ராஜனும் அன்று மாலை அம்புலியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இறப்பதற்கு முன்பு, ராஜன் அளித்த வாக்குமூலத்தில் போலீசாரை மிரட்டவே தீக்குளிப்பது போல நடந்து கொண்டதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக தீப்பற்றியதாகவும் ராஜன் கூறினார். ராஜன் உயிரிழந்த 2 மணிநேரத்தில், ஜப்தி நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியானது.
ராஜன் தம்பதி தீக்குளித்த காட்சி கேரளா முழுவதும் வைரலாகப் பரவி பெரும் அதி்ர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. அதேநேரம், ராஜனின் உடலை அவரது வீட்டின் பின்புறத்தில் அடக்கம் செய்வதற்காக 2வது மகன் ரஞ்சித் தானே மண்வெட்டியை எடுத்து தோண்டிக் கொண்டிருந்தார்.
அங்கே உடலை அடக்கம் செய்யக் கூடாது என போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது தந்தையைக் கொன்றது நீங்கள்தான் என ரஞ்சித் போலீசாரை நோக்கி ஆவேசமாக கேள்வி கேட்டார். அந்த வீடியோ காட்சியும் கேரளாவில் வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது; இதுதொடர்பான வாக்குவாதங்கள் பொதுமக்கள் மத்தியில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை கேரள காவல்துறை இணையதளத்தை ஊடுருவிய ஹேக்கர்ஸ், ரஞ்சித் பேசும் வீடியோவையும் போலீசாரை நோக்கி கை நீட்டிப் பேசும் புகைப்படத்தையும் வெளியிட்டனர். மேலும், கேரள காவல்துறையில் உள்ள காக்கி உடை அணிந்த குற்றவாளிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தியைப் பரப்பினர்.
சிறிது நேரம் கழித்து ஹேக்கர்ஸ் கேரள காவல்துறை இணையதளத்தில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து கேரள சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ராஜனின் மகன்களுக்கு வீடு கட்டித் தருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்; அவர்களின் கல்விச் செலவை அரசு ஏற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், ராஜன் வசித்த அதே இடத்திலேயே வீடு கட்டித்தர வேண்டும் எனவும், இருவரின் இறப்பிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இருவரின் தற்கொலைக்குப் பின்னர், அந்த நிலம் தனக்கு வேண்டாம் என வழக்கு தொடுத்த வசந்தா அறிக்கை விடுத்திருந்தார்.
மேலும் படிக்க...
Rajinikanth | ரஜினியின் ஆதரவை பெற முயற்சிக்கும் அரசியல் கட்சிகள்..
ஆனால் வசந்தா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்ததால் அவரை வீட்டில் இருந்து அகற்றிய போலீசார் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்த ராஜன், கூலித் தொழிலாளியாக இருந்தாலும் தனது ஊதியத்தில் சிறிய தொகையை மிச்சம் பிடித்து வந்துள்ளார். அந்தத் தொகையில் வாராவாரம் வீட்டிலேயே உணவு சமைத்து அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு விநியோகித்து வந்துள்ளார். அவரது இந்த மனிதாபிமானம் மிக்க செயல் கடந்த இரண்டு நாட்களாக கேரள சமூக வலைதளங்களில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.
இரக்க சுபாவம் கொண்ட ராஜன் தம்பதியின் தற்கொலை, கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்