Full Lockdown | நாடு முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு

கோப்பு படம்

கொரோனா பரவல் அதிகரிப்பால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  கொரோனா பரவலை தடுக்க மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா நகரில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை போலீசார் கைதுசெய்து வருகின்றனர்.

  பீகார் மாநிலம் லகிர்சாரை பகுதியில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் உள்ள மார்க்கெட்டில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமுடக்கத்தை மீறி நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் உள்ளதால் போலீசார் திணறி வருகின்றனர்.

  இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க தெலுங்கானா மாநிலத்தில் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கின்போது காலை 6 முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டும் மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் ஊரடங்கு அமலுக்கு வரும் முன்னதாக பொதுமக்கள் ஈத் பெருநாளுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆர்வம் காட்டினர்.

  அசாமில் செவ்வாய்க்கிழமை புதிய உச்சமாக 6200 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மாநில முழுவதும் வியாழக்கிழமை முதல் தீவிரமாக கட்டுப்பாடுகளை செயல்படுத்த உள்ளதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் மளிகை, காய்கறி கடைகள், உணவகங்கள் பிற்பகல் 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பிற்பகலுக்கு பின் பார்சல் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரச்சந்தைகள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 29-ம் தேதி முதல் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மக்கள் அதிகளவில் கூடினர். இதனால், புதன்கிழமை முதல் எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  இதனிடையே, கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட் உட்பட 8 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் ஆலோசனை மேற்கொண்டார்.

  தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தடுப்பூசி உற்பத்திற்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி மே-ஜூன் மாதத்தில் இரண்டு மடங்காக உயரும் என்றும் செப்டம்பர் மாதத்தில் 10 கோடி தடுப்பூசி வரை உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரை சேர்ந்த இளைஞர்கள் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
  Published by:Vijay R
  First published: