கொரோனாவால் வீட்டிலேயே இறந்த தாய்: 2 நாள்களாக உணவின்றி தாய் அருகிலேயே இருந்த 18 மாத குழந்தை - மனதை உலுக்கும் சம்பவம்

கொரோனாவால் வீட்டிலேயே இறந்த தாய்: 2 நாள்களாக உணவின்றி தாய் அருகிலேயே இருந்த 18 மாத குழந்தை - மனதை உலுக்கும் சம்பவம்

தாயை இழந்த குழந்தை

மகாராஷ்டிராவில் நோயால் மரணமடைந்த தாயின் சடலத்தின் அருகே 18 மாத குழந்தை இருநாட்களாக உணவின்றி தவித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பெண் ஒருவர் தனது 18 மாத குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது கணவர் உத்தரபிரதேசத்திற்கு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண், இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லாததால், இரண்டு நாட்களாக பால் மற்றும் உணவுக்காக குழந்தை பரிதவித்துள்ளது. இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்தபோது, பெண் உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது சடலத்தின் அருகே 18 மாதக் குழந்தை இருந்துள்ளது.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா அச்சம் காரணமாக அக்கம் பக்கத்தினர் யாரும் குழந்தைக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், அங்கு வந்த பெண் காவலர்கள் சுசிலா மற்றும் ரேகா ஆகியோர் குழந்தையை வாஞ்சையுடன் மீட்டு, பாலும் பிஸ்கட்டும் கொடுத்தனர். இருநாட்களாக பசியில் இருந்த குழந்தை பாலை குடித்து, அவர்கள் கொடுத்த பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டது.

  அப்போது குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர், குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானதால், குழந்தையை அரசு காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: