இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்கும் - சீரம் நிறுவனத் தலைவர்

ஆதர் பூனவல்லா

இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நீடிக்கும் என்று சீரம் நிறுவன செயல்தலைவர் ஆதர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துவருகிறது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்றுவருகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய கொரோனா தடுப்பூசி பணியில் முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்றும் மாநில அரசு அந்தப் பணியை மேற்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

  ஆனால், திட்டமிட்டபடி மே 1-ம் தேதி முதல் தடுப்பூசி பணியைத் தொடங்கமுடியவில்லை. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மே 1-ம் தேதி தொடங்க வேண்டிய தடுப்பூசி பணி தொடங்கவில்லை. போதிய தடுப்பூசி இல்லாததன் காரணமாக பணி தொடங்க தாமதம் ஆகியுள்ளது. இதுதொடர்பாக கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனத் தலைவர் ஆதர் பூனவல்லா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

  அந்தப் பேட்டியில் அவர், ‘ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும். ஜூலை மாதம் வரையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு தொடரும். கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு எங்கள் நிறுவனம் மீது அரசியல்வாதிகளால் பழிசுமத்தப்படுகிறது. கொள்கை முடிவுகளுக்கு அரசுதான் பொறுப்பு. சீரம் நிறுவனம் பொறுப்பு கிடையாது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையும்போது, கொரோனா இரண்டாவது அலை தாக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை. நான், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவில்லை. ஏனென்றால் தடுப்பூசி உற்பத்திக்கு எனக்கு யாரும் ஆர்டர் தரவில்லை. ஆண்டுக்கு 100 கோடி டோஸ்கள் தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது என்று நான் நினைக்கவில்லை’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: