சர்வதேச டெண்டர்: மாநில அரசுகளுக்கு பதிலளிக்காத தடுப்பூசி நிறுவனங்கள்- மத்திய அரசு உதவுமா?

தடுப்பூசி

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுக்கு தடுப்பூசிக்காக சர்வதேச டெண்டர் கோரியுள்ளநிலையில், தடுப்பூசி நிறுவனங்கள் உரிய பதில் அளிக்காத சூழல் உள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் புரட்டி எடுத்த நிலையில், எல்லா நாடுகளும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கின. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவேக்சின் தடுப்பூசியும், அஸ்டாஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்திய அரசு, இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதியளித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

  தொடக்கத்தில் நாடு முழுவதுமுள்ள முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், 60-வது வயதுக்கு கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடக்கம் முதலே தடுப்பூசி செலுத்துப் பணியில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்துவந்தன. மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையை மாநில அரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்தனர்.

  இதற்கிடையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியது. அதனையடுத்து, தடுப்பூசி குறித்த தேவை மக்களிடையே எழுந்தது. அதனைத் தொடர்ந்து, மாநில அரசுகள் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளலாம் என்று மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால், மாநில அரசுகளுக்கு தேவையான அளவுக்கு தடுப்பூசி மத்திய அரசால் வழங்கப்படவில்லை. இந்திய தயாரிப்பு நிறுவனங்களான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஒரு விலையிலும் மாநில அரசுகளுக்கு ஒரு விலையிலும் தடுப்பூசிகள் வழங்கபடும் என்று அறிவித்தன. அதுவும் கூட போதுமான அளவில் கையிருப்பு இல்லை.

  மத்திய அரசு அறிவித்தபடி மே 1-ம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. தற்போதுவரை, பல இடங்களில் தடுப்பூசி தட்டுபாடு நிலவிவருகிறது. அதனையடுத்து, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் தன்னிச்சையாக சர்வதேச அளவில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசிக்கு டெண்டர் கோரின.

  இதன் தொடர்ச்சியாக பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலங்கள் தடுப்பூசி உற்பத்தியில் முன்னணியில் உள்ள பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களுடன் தடுப்பூசி கொள்முதல் செய்வது பற்றிப் பேசியுள்ளன. இருப்பினும், சர்வதேச நிறுவனங்கள், மாநில அரசுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. அவர்கள், மத்திய அரசிடம் நேரிடையாகவே தடுப்பூசிகளை விற்கவிரும்புகின்றன.

  மாநில அரசுகள் விடுத்துள்ள டெண்டர்களுக்கு அங்கீகாரம் உள்ள நிறுவனங்கள் எதுவும் பதிலளிக்கவில்லை. மாறாக, மருத்துவத்துறையில் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசியை வாங்கித்தருகிறோம் என்று பதிலளிக்கின்றனர். மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள டெண்டருக்கு ரோமானிய நிறுவனம் பதில் அளித்தது. அதில், பைசர் தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறோம் என்று கூறியுள்ளது. ஆனால், பைசர் நிறுவனமோ, அந்த ரோமானிய நிறுவனத்துக்கும் எங்களும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

  இவ்வாறு, சர்வதேச டெண்டர் கோரி, பணம் செலவு செய்து தடுப்பூசி வாங்க முயற்சி செய்தாலும் மாநில அரசுகளால் தடுப்பூசி வாங்க இயலாத சூழல் உள்ளது. இதற்கிடையில், மத்திய அரசு எங்களுக்கு சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்கித் தரவேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளது. மத்திய அரசுக்கு உத்தரவிடும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் முடிவுசெய்துள்ளது. தமிழக அரசும் சுமார் 5 கோடி தடுப்பூசி மருந்துகளுக்கு சர்வதேச டெண்டர்கோரியுள்ளது. தமிழ்நாட்டுக்கும் டெண்டர் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலே உள்ளது. எனவே, மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கைவைக்கின்றன.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: