கொரோனா இரண்டாவது அலை: உலக நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குவியும் உதவி

கோப்புப்படம்

முதல்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் மருந்து வந்திருப்பதாக இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

  • Share this:
    கொரோனா 2-ம் அலை தலை விரித்தாடும் சூழலில், இந்தியாவுக்கு உதவிகரம் நீட்ட உலக நாடுகள் முன்வந்துள்ளன.

    கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று கடந்த வருட இறுதியில் கணிசமாக குறையத் தொடங்கியது. கட்டுக்குள் வந்து விட்டது என நினைக்கையில், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிக அளவில் பரவத் தொடங்கியது. கடந்த வாரம் முழுக்க நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இதனால் இந்தியாவில் சிகிச்சையில் இருக்கும் ஆக்டிவ் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துது வருகிறது. தற்போது 32.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 2.11 லட்சம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

    இந்தியாவில் நிலவி வரும் இந்த ஆபத்தான நிலையைக் கண்டு உதவ முன் வந்தது ஐ.நா. ஆனால் தங்களிடம் எல்லா மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பதாகக் கூறி அவ்வுதவியை நிராகரித்தது இந்தியா. இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தைக் கிளப்பியது.

    தற்போது ஐநா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், உஸ்பெகிஸ்தான் போன்ற பல நாடுகளும் இந்தியாவுக்கு தங்கள் உதவிக் கரத்தை நீட்டி இருக்கின்றன. இந்தியாவும் அந்த உதவிகளை நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டு வருகிறது.

    சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்கா மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது. இன்று காலை 1,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இது கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவிடம் இருந்து மூன்றாவது முறையாக இந்தியா பெறும் உதவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வான் வழியாக வந்து சேர்ந்திருக்கின்றன. சமீபத்தில் இந்தியா அனுமதியளித்த ஸ்புட்நிக் V கொரோனா தடுப்பூசி, ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்து சேர்ந்திருக்கிறது. முதல்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் மருந்து வந்திருப்பதாக இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    உஸ்பெகிஸ்தான் நாட்டிலிருந்து 100 ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள் உட்பட பல மருத்துவ உதவிகள் வந்து சேர்ந்திருப்பதை இந்திய வெளி விவகாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்திருக்கிறார். இதற்கிடையே உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவியை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் போது, மத்திய அரசு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள் மீதான ஐஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்திருக்கிறது. இது ஜூன் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: