Corona | மீண்டும் 2 லட்சத்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: 4,157 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் இரண்டு லட்சத்தை கடந்துள்ளது, ஒரே நாளில், இரண்டு லட்சத்து எட்டாயிரம் பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு செவ்வாய்க்கிழமை இரண்டு லட்சத்துக்கும் கீழ் பதிவானது. இந்நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டு, 2,08,921 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,71,57,795 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் 61.26 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 4,157 பேர் பலியாகி உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,11,388 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,95,955 பேர் மீண்டுள்ளதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 43 லட்சத்தை தாண்டியுள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 22 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பார்க் நகரில் இருந்து, ஆக்சிஜன் தயாரிக்கும் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் லாரிகளில் ஹின்டான் விமான தளத்துக்கு வந்தடைந்தன.

    தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், டெல்லி துவாரகாவில் டிரைவ்-இன் தடுப்பூசி முகாமை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் போபால், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால், வெறிச்சோடி காட்சியளித்தது.

    அசாம் மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூன் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: