இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்தாலும், இறப்பு விகிதம் 92 சதவீதம் அதிகரிப்பு

கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த மாதத்தைக் காட்டிலும் 92 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்து பதிவான கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக 3 லட்சத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடும்போது இந்த மாதத்தில் 92 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

  நாடு முழுவதும் கடந்த மாதத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 43258. ஆனால் தற்போது 92 சதவீதம் அதிகரித்து இந்த மாதத்தில் இதுவரை 83135 பேர் உயிரிழந்துள்ளனர்.

  டெல்லியில் இந்த மாதத்தில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கு இதுவரை 6684 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 2.54 சதவீதம் பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் டெல்லியில் 1.12 ஆக இருந்த உயிரிழப்பு வீதம் தற்போது 2 மடங்குக்கு மேல் உயர்ந்து 2.54 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது. இது நாட்டிலேயே அதிகபட்ச உயிரிழப்பு வீதமாகும்.

  பஞ்சாபில் இந்த மாதம் இதுவரை 3874 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏப்ரல் மாதத்தில் 1.56 ஆக இருந்த உயிரிழப்பு வீதம் தற்போது 2.46 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் கும்பமேளா நிகழ்ந்த உத்தராகண்ட் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு இம்மாதத்தில் 2976 பேர் பலியாகியுள்ள நிலையில் கடந்த மாதத்தில் 1.18 ஆக இருந்த உயிரிழப்பு வீதம் 2 புள்ளி 34 ஆக உயர்ந்துள்ளது.

  தேசிய அளவில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Vijay R
  First published: