குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று மாலை உரை!

பிரதமர் மோடி.

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக நாடே கடும் இன்னல்களை சந்தித்தது. தற்போது படிப்படியாக தொற்று பரவல் குறைந்து, பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 • Share this:
  கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

  கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் சமயத்தில் நாட்டு மக்களிடம் பல முறை பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களுக்கு ஆலோசனை வழங்கினார். நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை மேற்கோள் காட்டினார்.

  கொரோனா இரண்டாம் அலை பாதிப்பால் கடந்த 2 மாதங்களாக நாடே கடும் இன்னல்களை சந்தித்தது. தற்போது படிப்படியாக தொற்று பரவல் குறைந்து, பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,636 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2,89,09,975 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2427 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,49,186 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, 14,01,609 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 23,27,86,482 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனினும், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சுட்டிகாட்டி மாநில அரசுகள், எதிர்கட்சிகள் மத்திய அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

  எனினும், டிசம்பர் மாதத்துக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு உறுதி கூறி வரும்நிலையில், நாட்டின் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தடுப்பூசி வாங்குவது, விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. அதுபோலவே பற்றாக்குறை தொடர்பாகவும் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன என மத்திய அரசுக்கு நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாறுபட்ட விலை நிர்ணயம் செய்ததன் மூலம் 18+ வயதினருக்கு ஒரே சீராக தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநிலங்கள் தடுப்பூசி பெறுவதில் பல்வேறு சிக்கல் உள்ளன. எனவே தற்போதைய தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். டிசம்பர் 31 வரையில் வழங்கப்படவுள்ள தடுப்பூசி விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  இதன் தொடர்ச்சியாக தனியார் மருத்துவமனை மூலம் வழங்கப்படும் தடுப்பூசியை கண்காணிக்க மத்திய அரசு திட்டம் ஏதேனும் வகுத்துள்ளதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு எப்படி செலவிட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  இதனிடையே, கடந்த சில வாரங்களாகவே மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டமாக பிரதமர் ஆலோசனை நடத்தி வந்தார்.

  இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். இதில், பல்வேறு மாநில அரசுகள், நிபுணர்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, கேள்வி எழுப்பப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும், கொரோனா பரவல் குறித்தும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: