₹ 17 கோடி ரெடி... சர்ச் & மருத்துவமனை கட்டுறோம்...! நூதனமாக பணமோசடி செய்த கும்பல் கைது

  • News18
  • Last Updated :
  • Share this:
    மத போதகர் எனக் கூறி தேவாலயம் கட்டுவதாக ஆன்லைன் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரியர் உட்பட மூவரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

    நைஜீரியாவைச் சேர்ந்த பீட்டர் டேனியல் என்பவர், தான் ஒரு மதபோதகர் என்றும், இந்தியாவில் தேவாலயம், மருத்துவமனை ஆகியவற்றை கட்ட ஆவலாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனை உண்மை என நம்பிய ஆந்திரப்பிரதேச மாநிலம், ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அஞ்சய்யா, முகநூலில் பீட்டர் டேனியல் உடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில், தான் 17 கோடி ரூபாயுடன் விரைவில் இந்தியா வர இருப்பதாகவும், ஆனால் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கு 15 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என்றும் அஞ்சய்யாவிடம் பீட்டர் டேனியல் தெரிவித்துள்ளார்.

    இதை நம்பிய அஞ்சையா, பீட்டர் டேனியல் கொடுத்த வங்கி கணக்கில் பல தவணைகளாக 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்துள்ளார்.

    இதையடுத்து பீட்டர் டேனியலுக்கு பலமுறை மெசேஜ் செய்தும் உரிய பதில் வராததால் சந்தேகமடைந்த அஞ்சையா, ஓங்கோல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    விசாரணையை தொடங்கிய போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர், டெல்லியில் இருப்பதை உறுதி செய்தனர். பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பிரச்சாரம் செய்த கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் நீண்ட நாள் விசாரணைக்கு பிறகு நைஜீரியர் பீட்டர் டேனியல் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து வங்கி ஏடிஎம் கார்டுகள், காசோலை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கைதானவர்களின் பின்னணியில் பலர் இருப்பதாக சந்தேகிக்கும் போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

     
    Published by:Sankar
    First published: