உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் அண்மையில் வைரலானது. இந்த புகைப்படம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்தது. இந்நிலையில் தண்டனை விவரம் குறித்த விசாரணை நடைபெற்றது. அப்போது பிரசாந்த் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், எனவே தண்டனை குறித்த விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரினார்.
ஆனால் குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய போகிறீர்கள் என்றால் தண்டனையை எதிர்த்தும் மறுஆய்வு செய்ய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தண்டனை வழங்கப்பட்டால் மறுஆய்வு செய்யும் வரை தண்டனை நிறைவேற்றப்படாது என்றும் நீதிபதிகள் உறுதியளித்தனர். என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் மறுஆய்வு மனு மீது முடிவெடுக்கப்பட்ட பின்னரே நிறைவேற்றப்படும் என்றும் எனவே தண்டனை விவர விசாரணையை ஒத்திவைக்க விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரசாந்த் பூஷன் ஜனநாயகத்துக்கு முரணாக செயல்படவில்லை என்றும் தவறான நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் துஷ்யந்த் தவே தெரிவித்தார். ஜனநாயகத்தில் விமர்சனங்கள் அடிப்படை கடமை என்பதால் அடிப்படை கடமையை செய்ததாகவே கருதுவதாகவும் அவர் கூறினார். அப்போது பிரசாந்த் பூஷன் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய 3 நாட்கள் வரை அவகாசம் வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் ஒப்புதல் தெரிவித்த நிலையில், 2 அல்லது 3 நாட்கள் ஆலோசித்து முடிவெடுக்குமாறு பிரசாந்த் பூஷன் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவகாசம் வழங்கினாலும் தன்னுடைய நிலைபாடு மாறாது என்றும், தனது கருத்துக்காக மன்னிப்பு கோரப் போவதில்லை என்றும் பிரசாந்த் பூஷன் தரப்பு தெரிவித்தது.
பிரசாந்த் பூஷன் சமூகத்துக்கு செய்த நல்ல விசயங்களை கருத்தில் கொண்டு அவருக்கு கண்டிப்பாக அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அட்டர்னி ஜெனரல் வலியுறுத்தினார். மேலும் ஏற்கனவே குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை வழங்கக் கூடாது என்றும் அட்டர்னி ஜெனரல் கோரினார். தவறை உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மன்னிப்பு கோரும்போது தான் சலுகை காட்ட முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் தனது கருத்துகளை முன்வைத்த பிரசாந்த் பூஷன், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் குற்றவாளி என்பதைக் கேட்டு வேதனைப்படுகிறேன். எனக்கு தரப்படப்போகும் தண்டனை குறித்து நான் வேதனைப்படவில்லை. நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்காகவே வேதனைப்படுகிறேன். ஜனநாயகத்தையும் அதன் மாண்புகளையும் பாதுகாப்பதற்கு வெளிப்படையான விமர்சனம் என்பது அவசியம் என்று நம்புகிறேன்.
நீதித்துறை சிறப்பாகச் செயல்படுவதற்கான முயற்சியாக ட்விட்டரில் நான் கூறிய கருத்துகளைப் பார்க்க வேண்டும். அந்த ட்வீட்கள் மூலம் உயர்ந்த கடமையை ஆற்றியதாக நான் கருதுகிறேன். மன்னிப்புக் கோருவது என்பதை, கடமை தவறியதாகக் கருதுகிறேன். நான் கருணை வழங்குமாறு கோரவில்லை. நீதிமன்றம் வழங்கக்கூடிய எந்தத் தண்டனையையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்” என்றார்
இதையடுத்து பிரசாந்த் பூஷன் தனது கருத்து குறித்து பரிசீலிக்க 2 நாட்கள் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Prashanth bushan