“ஆசாத் கூட்டம் போட்டு காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துகிறார். இதை அவர் பாஜகவின் ஆசியினால் செய்கிறார். இதை காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தைப் பறித்த மோடியை குலாம் நபி ஆசாத் புகழ்கிறார்”
தான் தேநீர் விற்ற காலத்தை மறக்காதவர் பிரதமர் மோடி, அவர் ஒரு அரிய மனிதர் என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத் பிரதமரைப் புகழ்ந்து தள்ள ஜம்மு காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜம்முவில் 28ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “பல்வேறு தலைவர்களின் சிறப்பு குணாதிசயங்களை கண்டுவியந்திருக்கிறேன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். பிரதமர் மோடியும் கிராமத்தில் இருந்து தலைவராக உருவெடுத்தவர். எங்களுக்குள் அரசியல் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பிரதமர் மோடியின் குணாதிசயத்தைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர் தனது பூர்விகத்தை மறைக்க விரும்பவில்லை. தேநீர் விற்றதை பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனால் சிலர் மாயஉலகத்தில் வாழ்கின்றனர். அவர்கள் உண்மையோடு தொடர்பை இழந்துவிட்டனர். நான் உலகம் முழுவதையும் சுற்றியுள்ளேன். எனினும் எனது உலகம், எனது கிராமத்தில் உள்ளது. 7 நட்சத்திர ஓட்டல்களைவிட எனது கிராமத்தில் எனது மக்களோடு அமர்ந்திருப்பதை அதிகம் விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
காஷ்மீர் முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை எம்.பி.பதவிக் காலம் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நிறைவு பெற்றது. அப்போது மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "எனது நெருங்கிய நண்பர் ஆசாத். அவருக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று கண்ணீர் மல்க கூறியதில் குலாம் நபி ஆசாத் நெகிழ்ந்து விட்டார்.
இந்நிலையில்தான் ஜம்மு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் குலாம் நபி ஆசாத் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்ட காங்கிரஸ் தொண்டர் படை தலைவர் இது தொடர்பாக செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “ஆசாத் கூட்டம் போட்டு காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துகிறார். இதை அவர் பாஜகவின் ஆசியினால் செய்கிறார். இதை காங்கிரஸ் தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தைப் பறித்த மோடியை குலாம் நபி ஆசாத் புகழ்கிறார்.
காங்கிரஸ் கட்சி அவரை நல்ல பதவியில்தான் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி இப்போது பலவீனமடையும் போது குலாம் நபி ஆசாத் போன்றோர் தன் அனுபவம் கொண்டு கட்சிக்கு புத்துயிர்ப்பு அளித்திருக்க வேண்டும். மாறாக பலவீனப்படுத்துகிறார்” என்று கூறினார்.