கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வீட்டின் மாடியில் ஏறி காங்கிரஸ் தொண்டர் தற்கொலை மிரட்டல்!

காங்கிரஸ் தொண்டர் தற்கொலை மிரட்டல்

கடந்த 1970ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 முறை புதுப்பள்ளி தொகுதியில் (கோட்டயம் மாவட்டம்) போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உம்மன் சாண்டி.

  • Share this:
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி வரும் தேர்தல் தொகுதி மாற்றம் செய்து போட்டியிட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, வேறு ஒரு தொகுதியில் அவர் போட்டியிடக் கூடாது என வலியுறுத்தி உம்மன் சாண்டி வீட்டின் மாடியில் ஏறி காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதன் பிரதான போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதை தாமதப்படுத்தி வருகிறது. நேற்று மாலையே வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது பட்டியல் வெளியீடு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே வேட்பாளர் பட்டியல் தொடர்பாக டெல்லி சென்றுள்ள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மூத்த காங்கிரஸ் தலைவர்களிடையே பேசியதாகவும், அப்போது உம்மன் சாண்டியை, அவருடைய சொந்த தொகுதியான புதுப்பள்ளிக்கு பதிலாக பாஜக கைவசமுள்ள ஒரே தொகுதியான நேமம்-ல் போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் உம்மன் சாண்டியின் ஆதரவாளர்கள் புதுப்பள்ளி தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி புதுப்பள்ளியில் உள்ள அவருடைய வீட்டின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1970ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 முறை புதுப்பள்ளி தொகுதியில் (கோட்டயம் மாவட்டம்) போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உம்மன் சாண்டி. 50 ஆண்டுகளாக அவர் புதுப்பள்ளி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். அவரை தொகுதி மாற அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கோஷமிட்டனர். இதனிடையே உம்மன் சாண்டியின் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் உம்மன் சாண்டியின் வீட்டு மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே டெல்லி சென்றுவிட்டு விமான நிலையத்தில் இருந்து புதுப்பள்ளி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது உம்மன் சாண்டியின் காரை வழிமறித்த காங்கிரஸ் தொணடர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உம்மன் சாண்டி நேமம் தொகுதியில் போட்டியிட மாட்டார், அவர் புதுப்பள்ளி தொகுதியில் தான் போட்டியிடுவார் என்று மூத்த தலைவர் கே.சி.ஜோசப் தெரிவித்தார்.
Published by:Arun
First published: