காங்கிரஸில் மாஸ் ராஜினாமா: வேட்பாளர் தேர்வில் திணறும் கேரள காங்கிரஸ்!

காங்கிரஸில் மாஸ் ராஜினாமா: வேட்பாளர் தேர்வில் திணறும் கேரள காங்கிரஸ்!

காங்கிரஸ்

போராட்டத்தின் ஈடுபட்ட ஆதரவாளர்கள் பிந்து கிருஷ்ணாவை ஆரத் தழுவி கோஷமிட்டதால், அவர் உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தினார்.

  • Share this:
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பெருமளவில் ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை சிபிஎம் வெளியிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு இன்னமும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது. இந்த முறை 92 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் முகாமிட்டுள்ள கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட்களை கேட்டுப் பெறுவதில் மும்முரமாக இருக்கின்றனர்.

இதனிடையே கொல்லம் மாவட்டத்தின் Thrippunithura தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பாபுவிற்கு பதிலாக முன்னாள் கொச்சி மேயர் சவுமினி ஜெயினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சவுமினி ஜெயின் தொகுதிக்கு சம்மந்தமில்லாதவர் என்று உள்ளூர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபுவுக்கு வாய்ப்பு அளிக்காததால் அவருக்கு ஆதரவாக Thrippunithura தொகுதியின் காங்கிரஸ் கூட்டணியின் (UDF) தலைவர், 6 தொகுதி தலைவர்கள், 120 பூத் தலைவர்கள், 2 மாவட்ட செயலாளர்கள் ராஜினாமா கடிதத்தை மாவட்ட காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல கொல்லம் தொகுதியில் பெண் தலைவரான பிந்து கிருஷ்ணாவுக்கு வாய்ப்பளிக்காமல் அவரை தொகுதி மாறி Kundaraவில் போட்டியிட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது என்ற தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பிந்து கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொகுதியின் அனைத்து மண்டல் தலைவர்களும் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு பிளாக் தலைவர்களும் பிந்துவிற்கு ஆதரவாக ராஜினாமா செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. போராட்டத்தின் ஈடுபட்ட ஆதரவாளர்கள் பிந்து கிருஷ்ணாவை ஆரத் தழுவி கோஷமிட்டதால், அவர் உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்தினார்.

பிந்துவிற்கு பதிலாக மாநிலச் செயலாளர் விஷ்னுநாத் கொல்லம் தொகுதி வேட்பாளராக்கப்படுவார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இது உள்ளூர் காங்கிரஸாரை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

Irikkur தொகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்னரே அதிருப்தி அலைகள் உருவாகி வருவது காங்கிரஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு டெல்லியிலிருந்து அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது மேலும் அதிருப்தி அலைகள் மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
Published by:Arun
First published: