எதிர்காலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கூட
காங்கிரஸ் கட்சி இருக்காது என்று அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா கடுமையாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க பெறும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்துவந்தனர்.
இதற்கிடையே, சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
5 மாநிலங்களில் அடைந்த படுதோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அசாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா கூறியதாவது- காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் விமர்சிக்க மாட்டேன். ஆனால், சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி பொறுப்பில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஒரு வெற்றியைக் கூட அக்கட்சி பெற முடியவில்லை. எதிர்காலத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி இல்லாத நிலை ஏற்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க -
''போலி ஆவணங்கள் மூலம் கொரோனா நிவாரண நிதி'' - உச்ச நீதிமன்றம் கவலை
பஞ்சாப் மாநிலத்தில் வரலாறு காணாத படுதோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. இங்கு மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் மொத்தமே 18 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முன்பு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. போட்டியிட்ட 97 சதவீத இடங்களில் டெபாசிட்டை அக்கட்சி இழந்தது. பஞ்சாப் தோல்வியை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ராஜஸ்தான், சட்டீஸ்கர் என 2 ஆக குறைந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.