பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை ஏற்பது என்பது முக்கியம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை வகித்து வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தான் தலைமை ஏற்கப் போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்திருந்தார்.
இதனை குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டபோது, 'ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு யார் தலைமை வகிக்கிறார் என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்' என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது- விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். மற்ற எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பும்.
இதையும் படிங்க - ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறுங்கள்.! கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய திமுக எம்.பி டிஆர் பாலு
பெட்ரோல், டீசல் விலையை கடந்த 10 நாட்களில் 8 ரூபாய் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஏழை மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடிக்கிறது. மேலும், உரத்திற்கு வழங்கப்படும் மானியத்தையும் மத்திய அரசு குறைத்துள்ளது. பணவீக்கம் காரணமாக உரத்தின் விலையும் உயரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க - தண்டவாளத்தில் விரிசல்... சிவப்பு சேலையை கட்டிவைத்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தற்போது தலைமை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் ஏற்படுத்தப்படாத நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூட்டணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள சரத் பவார், பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணிக்கு தலைமையேற்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், ஆனால் கூட்டணியை பலப்படுத்தும் அனைத்து பணிகளையும் மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.