புதிய நாடாளுமன்றத் திட்டத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தானில் எம்.எல்.ஏக்களுக்கு உயர்ரக விடுதி - காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு?

புதிய நாடாளுமன்றக் கட்டிடடத்தின் மாதிரி படம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா காலத்தில் எம்.எல்.ஏக்களுக்காக 160 குடியிருப்புகள் கொண்ட உயர்ரக அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுவருகிறது.

  • Share this:
சென்ட்ரல் விஸ்டா புராஜெக்ட்' என்ற பெயரில் மத்திய அரசு மேற்கொண்டுவரும் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தின் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. நாடாளுமன்ற புதிய வளாக திட்டத்தின் கீழ் பிரதமரின் புதிய இல்லம் மற்றும் பிரதமர் அலுவலகம் தெற்கு பிளாக் பகுதியில் வரவிருக்கிறது. துணைக்குடியரசுத் தலைவரின் இல்லம் வடக்குப் புறத்தில் இருக்கும். தற்போது இருக்கும் போக்குவரத்து மற்றும் ஷ்ரம் சக்தி பவன்கள் இருக்கும் இடத்தில் எம்.பி.க்களின் அறைகள் வரவிருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கு 20,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் இவ்வளவு செலவில் பிரதமர் இல்லம் கட்டப்படுவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. கட்டடம் கட்டப்படுவதற்கு ஆகும் செலவை, கொரோனா தடுப்பு பணிகளுக்கு செலவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. முன்னதாக, இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தநிலையில், சமீபத்தில் கொரோனா காலத்தில் நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டத் தடை விதிக்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டடப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 266 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எம்.எல்.ஏக்களுக்கான உயர்ரக தங்கும் விடுதிகள் கட்டப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணி மே 20-ம் தேதி தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில வீட்டு வசதி வாரியத்தில் இந்த தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுவருகிறது. 160 குடியிருப்புகள் கொண்ட இந்த தங்கும்விடுதிகள் ஒவ்வொன்றும் 3,200 சதுர அடியில் நான்கு படுக்கை அறை வசதியுடன் கட்டப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்பூரில் அமைந்துள்ள சட்டமன்றத்துக்கு எதிரில் எம்.எல்.ஏக்கள் விடுதிகள் கட்டப்படுகிறது. ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையம் 176 குடியிருப்புகள் கட்ட அனுமதி கேட்ட நிலையில், 160 குடியிருப்புகள் கட்டுமானத்தைத் தொடர ராஜஸ்தான் வீட்டு வசதி வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. 30 மாதங்களில் இந்த திட்டத்தை கட்டிமுடிக்கத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் எம்.எல்.ஏக்களுக்கு விடுதி கட்டப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: