காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துவிட்டதால், 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது முதல், கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜி-23 என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் குழு சோனியாவிற்கு கடிதம் எழுதினர்.
அதில் காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும் எனவும் அவர்கள் வெளிப்படையாக குரல் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
கட்சி தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க குரல்கள் ஒலித்த நிலையில், அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சோனியா காந்தியும் தனது உடல்நிலை காரணமாக தலைவர் பதவியில் தொடர முடியாது என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரை தலைவர் பதவியில் அமர வைக்க கட்சி உறுப்பினர்கள் பலர் விரும்புவதால் தற்போது அவர்களின் கவனம் பிரியங்கா காந்தியிடம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவர் பொறுப்பாளராக இருந்த உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை காந்தி குடும்ப எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், கட்சி தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தை சாராத நபர் தலைவர் என்றால் அது யாராக இருக்கக் கூடும் என ஊகங்கள் வர தொடங்கிவிட்டன. அந்த வகையில் அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், மீரா குமார், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கேயின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
காங்கிரஸ் தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க 101 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக ப. சிதம்பரமும் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஜி-23 குழுவைச் சேர்ந்த தலைவர்களும் தங்களில் ஒருவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய காங்கிரஸ் தலைவர் அக்கட்சியின் மாநில பிரதிநிதிகளான சுமார் 14 ஆயிரம் பேரால் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த வாரம் நடைபெற உள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி புதிய காங்கிரஸ் தலைவர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை சமர்ப்பிக்க உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தேர்தெடுக்கபடும் பட்சத்தில் 1998-ம் ஆண்டுக்குப் பின் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் சூழல் உருவாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Rahul gandhi, Sonia Gandhi