முகப்பு /செய்தி /இந்தியா / அடக்குமுறையுடன் கைது செய்து ஆடையை கிழித்த போலீசார் - எம்பி ஜோதிமணி புகார்

அடக்குமுறையுடன் கைது செய்து ஆடையை கிழித்த போலீசார் - எம்பி ஜோதிமணி புகார்

ஜோதிமணி

ஜோதிமணி

MP Jothimani | வீடியோ பதிவு எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஜோதிமணி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்த புகாரை அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரான நிலையில், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகிறது. அமைதி போராட்டம் நடத்தும் எங்கள் மீது காவல்துறை அராஜகமாகத் தாக்குதல் நடத்தி கைது செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர் புகார்களை எழுப்பி வருகின்றனர். தங்கள் இரு நாள்களுக்கு முன்னர் காவல்துறை நடவடிக்கையின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடை கிழித்துள்ளதாக புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டுள்ள ஜோதிமணி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்த புகாரை அளித்துள்ளார்.

அதில், 'டெல்லி காவல்துறை மிக மோசமாக தாக்கி எனது ஆடையை கிழித்து வரம்பு மீறி கைது செய்து ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு மணி நேரமாக தாகம் என தண்ணீர் கேட்டு வரும் எங்களுக்கு தண்ணீர் கூட தர மறுக்கிறார்கள்.கடையில் கூட தண்ணீர் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது யாருக்கும் நேரக்கூடாது. எனவே, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வீடியோ பதிவில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல்.. மம்தா ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிக்கும் கட்சிகள்

அதன் பின்னர், தான் தற்போது நரேலா காவல்நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு துணை ராணுவப் படையினர், கலவரத்தடுப்பு காவலர்கள் என நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Indian National Congress, Jothimani